கொடநாடு வழக்கில் மேலும் ஒருவர் கைது!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக ஊட்டி நீதிமன்றத்தில் மறுவிசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படை போலீசார் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், மனோஜ் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக சசிகலாவிடமும் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த சிலநாட்களுக்கு முன்னர் சயான், வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி, சதீசன், பிஜின்குட்டி, உதயன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை அடுத்த மாதம் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்.

முன்னதாக கொடநாடு வழக்கில் தொடர்புடைய கனகராஜ் சேலம் ஆத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது கார் மோதி மர்மமான முறையில் இறந்தார். கனகராஜின் மரணம் விபத்து அல்ல, கொலை என காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை திரும்ப பெற வேண்டும் என கனகராஜ் மனைவியை கனகராஜ் சகோதரர் பழனிவேல் மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பழனிவேல் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கனகராஜ் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் பழனிவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை வழக்கு தொடர்பாக 217 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். இதுதவிர முன்னாள் முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.