உத்தவ் தாக்கரே அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவு!

மராட்டிய சட்டமன்ற கூட்டத்தை கூட்டி நாளை பெரும்பான்மையை நிரூபிக்க சிவசேனா அரசுக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக செயல்பட்டு வருகிறார். இதனிடையே, உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் திரும்பியுள்ளனர். காங்கிரஸ் – தேசியவாத காங்கிரசுடன் இணைந்து அமைத்துள்ள மகாவிகாஸ் அகாடி கூட்டணி அரசில் இருந்து சிவசேனா விலகி பாஜகவுடன் இணைய வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே தரப்பு உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கடி கொடுத்துவந்தது. ஏக்நாத் ஷிண்டே அணியில் 46 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 39 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை சேர்ந்தவர்கள் எனவும் எஞ்சிய 7 பேர் சுயேட்சைகள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, சிவசேனா தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லை எனவும், அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரியும் மராட்டிய கவர்னரிடம் நேற்று பாஜக கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில், மராட்டிய அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென மாநில கவர்னர் உத்தரவிட்டுள்ளார். மராட்டிய சட்டசபையை சபாநாயகர் நாளை கூட்டி வாக்கெடுப்பு நடத்தி மாலை 5 மணிக்குள் சிவசேனா அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டுமென கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே பக்கம் நிற்பத்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்பட்சத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சட்டப்பேரவையில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்போம் என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

இதற்கு மத்தியில் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்து விட்டு ஆட்சியமைக்கும் முனைப்பில் பா.ஜனதா நேற்று வெளிப்படையாக களத்தில் இறங்கியது. பா.ஜனதா முன்னாள் முதல்-மந்திரியான தேவேந்திர பட்னாவிஸ் அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டார். அவர் மாலையில் பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா வீட்டுக்கு சென்று அவருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மராட்டியத்தில் நிலவும் அரசியல் குழப்பம் மற்றும் பா.ஜனதா ஆட்சியமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஜே.பி. நட்டாவுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்களுடன் சட்ட நிபுணர் ஒருவரும் இருந்தார்.

இந்த நிலையில் விமானம் மூலம் மும்பை திரும்பிய தேவேந்திர பட்னாவிஸ் இரவு 9.30 மணியளவில் ராஜ்பவன் சென்றார். அவருடன் மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் உடன் இருந்தார். அப்போது, உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கவர்னரை கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதனால் மராட்டிய அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.