ஆளுநர் ரபேலை விட வேகமாக செயல்படுகிறார்: சஞ்சய் ராவத்

ரபேல் போர் விமானத்தை விட, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி வேகமாக செயல்படுவதாக, சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்து உள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கி உள்ளார். தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு, அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஏக்நாத் ஷிண்டே தங்கி உள்ளார். இதன் காரணமாக, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான சிவசேனா எம்எல்ஏக்கள், அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே உடன் இருப்பதால், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசு கவிழும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே, மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை, மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான தேவேந்திர பட்னவிஸ் சந்தித்துப் பேசினார். அப்போது, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது என்றும், சட்டப்பேரவையில், பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதலமைச்சருக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டு உள்ளார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த, சிவசேனா மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஜெட் விமானத்தின் வேகத்தை விட ஆளுநர் வேகமாக செயல்பட்டார். அது ஜெட் வேகம். ரஃபேல் போர் விமானம் கூட இவ்வளவு வேகமாக செயல்பட்டது இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்க சிறப்பு சட்டசபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற ஆளுநரின் உத்தரவை எதிர்த்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்தை அணுகுவார்.

எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது என்று கூறி வருகிறோம். சட்டப்படி தான் அனைத்தையும் செய்துள்ளோம். இதை சட்டரீதியாக எதிர்கொள்கிறோம். சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம். எங்களிடம் போராட விரும்பினால் முன் நின்று போராடுங்கள்.

கவர்னரின் நடவடிக்கை சட்ட விரோதம். 16 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இச்சூழ்நிலையில், எப்படி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட முடியும். கடந்த 2 ஆண்டுகளாக, கவர்னரிடம் அனுப்பிய கோப்புகள் நிலுவையில் உள்ளன. அதில், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் ரபேல் போர் விமானங்களை விட வேகமாக செயல்பட்டுள்ளார்.

இந்திய அரசியல்சாசனத்துடன் பா.ஜ.,வும், கவர்னரும் இணைந்து விளையாடுகின்றனர். நாங்கள் உச்சநீதிமன்றத்தை நாடி நீதியை கோருவோம். எம்எல்ஏ.,க்கள் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் மும்பை திரும்பிய பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.