திராவிட மாடல் அரசை குறை கூற காரணங்களின்றி ஒரே பொய்மை அரைத்து அரைத்து மாக்களை ஏய்க்க நினைக்கிறார் பொய்ச்சாமி பழனிசாமி என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடு முழுமைக்கும் லட்சத்துக்கு 62 என்றால் தமிழ்நாட்டில் 24 என்ற அளவில் உள்ளது. தனது கட்டுப்பாட்டில் இருந்து அதிமுக கைநழுவிடுமோ என்ற அச்சத்தில் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ஈபிஎஸ் அரசியல் செய்கிறார். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை வைத்து, இழந்த அரசியல் செல்வாக்கை ஈபிஎஸ் மீட்க துடிக்கிறார்.
இந்தியாவிலேயே பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. என்சிஆர்பி தேசிய குற்ற ஆவண காப்பகம் இறுதியாக வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி குற்றங்கள் தமிழ்நாட்டில் மிக மிக குறைவாகவே உள்ளது. பாலியல் வன்புணர்வு வழக்குகளின் தேசிய சராசரி 4.6 என்ற அளவிலும், தமிழ்நாட்டில் 0.7 அளவிலும் உள்ளது.
பெண்கள், குழந்தைகள் நலனிலும், பாதுகாப்பிலும் திராவிட மாடல் அரசு எந்த சமரசமுமின்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிராய் வீண் வதந்தி பரப்பி அச்சுறுத்த நினைக்கும் பொய்ச்சாமிகளை மக்களே புறந்தள்ளுவர். திராவிட மாடல் அரசை குறை கூற காரணங்களின்றி ஒரே பொய்யை அரைத்து அரைத்து மக்களை ஏய்க்க நினைக்கிறார் பொய்ச்சாமி பழனிசாமி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.