சவுமியா அன்புமணி மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு!

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற சவுமியா அன்புமணி உள்ளிட்ட 297 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பா.ம.க. மகளிர் சங்கம் சார்பில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

எனினும், தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்வதற்காக பா.ம.க.வினர் நேற்று காலை 10 மணியளவில் வள்ளுவர் கோட்டம் அருகே குவிந்தனர். போராட்டத்திற்கு வந்திருந்தவர்களை விட 2 மடங்கு போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும், போராட்டத்தில் பங்கேற்பவர்களை கைது செய்து அழைத்து செல்வதற்காக பஸ்களும் முன்னேற்பாடாக அங்கு நிறுத்தப்பட்டு இருந்தன.

இதற்கிடையே ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு சவுமியா அன்புமணி காலை 10.45 மணியளவில் காரில் வந்தார். அவர் காரைவிட்டு இறங்கியவுடன் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பின்னர் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். இதனால், போராட்டத்திற்கு வந்திருந்த பா.ம.க.வினர் தி.மு.க. அரசுக்கு எதிராகவும், போலீசாருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, மாநில பொருளாளர் திலகபாமா உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பா.ம.க.வினர் நுங்கம்பாக்கத்தில் ஒரு சமுதாயநலக் கூடத்திலும், திருவல்லிக்கேணியில் ஒரு சமுதாயநலக் கூடத்திலும் வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற சவுமியா அன்புமணி உள்ளிட்ட 297 பேர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாலை 6 மணிக்கு காவல்துறையினர் சவுமியா மற்றும் அவரோடு கைது செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்டோரை விடுவித்தனர். பின்னர் சவுமியா அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

எங்களை கைது செய்ய முதல் ஆளாக வருகிறார்கள். எங்களை கைது செய்ய வந்த காவல்துறை, பெண் குழந்தைகளைக் காப்பாற்றி இருக்கலாமே. பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. கடந்த இரண்டு வருடங்களில் பாலியல் வன்கொடுமை இரு மடங்கு அதிகரித்துள்ளது. வட இந்தியாவைப் போல தமிழ்நாட்டிலும் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. எங்கள் குழந்தைகளை எப்படி வெளியே அனுப்புவது. உங்களுக்கும் பெண் குழந்தை உள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது. எங்கள் போராட்டதால்தான் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். மறுபடி மறுபடியும் குற்றம் செய்யக்கூடிய மனநோயாளி ஞானசேகரன். இதுவரை ஏன் குண்டர் சட்டத்தில் அவரை அடைக்க வில்லை. மதுவும் போதையும்தான் பாலியல் வன்கொடுமை நடக்க காரணம். இவ்வாறு அவர் கூறினார்.