தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாக சீரமைப்பு பணி தொடங்கியுள்ளது. மாவட்ட, மாநில பொறுப்புகளுக்கு கட்சியினர் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். பொங்கல் திருநாளில் குடும்ப அட்டைக்கு ரூ.1000 ஆயிரம் வழங்க வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாக சீரமைப்பு பணிகளை தொடங்கியுள்ளது. இதற்காக மாவட்ட, மாநில பொறுப்புகளுக்கு, கட்சி நிர்வாகிகள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். 15 நாட்களுக்கு விருப்ப மனுக்கள் பெறப்படும். இந்த மனுக்களை பரிசீலிக்க குழு அமைக்கப்பட்டு, பின்பு நிர்வாகிகள் பட்டியல் தேசிய தலைமைக்கு பரிந்துரை செய்யப்படும்.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் உருவப்பட திறப்பு நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் வரும் 7-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று உருவப்படங்களை திறந்து வைக்க உள்ளார். இதில் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.
அன்று மாலை ‘நேருவும் அம்பேத்கரும் அரசியலமைப்புச் சட்டமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.கிராமம் தோறும் காங்கிரஸ் திட்டத்தின் படி, காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் கனவை நினைவாக்கும் வகையில் 8-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் புதிய உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 790 நிர்வாகிகளை நியமிக்க வேண்டியுள்ளது. கிராம, நகர கமிட்டிகளை வலிமைப்படுத்தும் நிர்வாகிகளுக்கு உள்ளாட்சி, எம்எல்ஏ, எம்பி தேர்தல்களில் முதன்மையாக பரிந்துரைக்கப்படும். புதியவர்களுக்கு கட்சியில் வாய்ப்பு அளிக்கப்படும்.
தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். பரனூர் சுங்கச்சாவடியின் காலவரையறை முடிந்த நிலையில் அதை அகற்ற வேண்டும். பொங்கல் திருநாளில் குடும்ப அட்டைக்கு ரூ.1000 ஆயிரம் வழங்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் குற்றவாளியின் செல்போனில் இடம்பெற்ற தரவுகள் அடிப்படையில் சிறப்பு குற்றப்புலனாய்வு விசாரணை நடத்தி வருகிறது அதில் அவர் யாருடன் பேசினார் என விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் எந்த சாரும் தப்ப முடியாது. பல்கலைக்கழக விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.