”தமிழகத்தில் சாவர்க்கருக்கு மிகப்பெரிய அநியாயம் நடந்துள்ளது” என தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
எஸ்ஜே சூர்யா எழுதிய ‘ வீரசாவர்க்கர் ஒரு கலகக்காரரின் கதை’ என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த புத்தகத்தை பா.ஜ., அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் வெளியிட, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர். எம்.எல்.ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன், பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா, முன்னாள் அமைச்சர் ஹண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரங்கராஜ் பாண்டே வாழ்த்துரை வழங்கி பேசியதாவது:-
சுதந்திரக் காற்றை சுவாசித்தவர்களில் முக்கியமான ஒருவர். எந்த வகையிலும் தன்னை முன்னிலைப்படுத்தாமல் 82 வயது வரை வாழ்ந்தவர். வீரசாவர்க்கர் 15 வயதில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். மஹாத்மா காந்தியை போல் அவரும் சட்டப்படிப்பு படித்தார். ஆனால், காந்திக்கு கிடைத்த புகழ் வெளிச்சம் சாவர்க்கருக்கு கிடைக்கவில்லை. திராவிட இயக்கங்கள் சொல்லும் அத்தனை சமூக நீதி, கலப்பு திருமணம் என அனைத்தையும், 1924 ல் செய்தவர் என்றார்.
வானதி சீனிவாசன் பேசியதாவது:-
நாட்டின் விடுதலைக்கு அதிகமானவர்களை கொடுத்த மாநிலம் தமிழகம். இந்த நூல் என்பது சாவர்க்கரின் வரலாற்றினை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சி. சாவர்க்கரின் உண்மையான வரலாறு, அங்கீகாரம் என்பது பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு தான் நடந்தது. நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு எதிராக தி.மு.க., அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் தவறான விமர்சனங்களை சாவர்க்கர் தாங்கிக் கொண்டு உள்ளார். திட்டமிட்டு அரசியல் ரீதிியல் செய்யப்படும் விஷம பிரசாரங்களில் சாவர்க்கரின் வரலாறும் ஒன்று. இவ்வாறு அவர் பேசினார்.
பிறகு அண்ணாமலை பேசியதாவது:-
சாவர்க்கர் வாழ்க்கையை பாா்த்தால் பிறந்ததில் இருந்து ஒரு வேள்வியை பார்த்து கொண்டு இருந்தார். அனைவரும் சாப்பிட வேண்டும் என நினைத்தார். அதற்காக ஒரு உணவகத்தை உருவாக்கினார். அதில் இரண்டு முதலாளிகளை உருவாக்கினார். இன்றைக்கு தமிழகத்தில் சமூக நீதி பேசுபவர்களுக்கு எல்லாம் முன், அதனை செய்து காட்டினார்.
நாசிக் கலெக்டர் கொலை சம்பவத்தில் ஆயுதங்களை வழங்கியது, திட்டம் தீட்டியது மற்றும் பிரிட்டன் மன்னருக்கு எதிராக கிளர்ச்சி ஏற்படுத்தினார் என்பதற்காக இரட்டை ஆயுள் தண்டனை சாவர்க்கருக்கு வழங்கப்பட்டது. அந்தமானில் அவர் இருந்த சிறையை அனைவரும் பார்வையிட வேண்டும். தமிழக நண்பர்களுக்கு எந்த சிந்தனை இருந்தாலும், சாவர்க்கர் இருந்த அறையை பார்க்க வேண்டும். அவர்கள் அனைவரும் அரசியல் கட்சிக்காக உழைக்காமல், நாட்டிற்காக உழைத்தவர்கள். யாராக இருந்தாலும் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், சாவர்க்கரை திறந்த மனதுடன் அணுக வேண்டும் என்பது நான் வைக்கும் வேண்டுகோள்.
அந்தமான் சிறையில் அவருக்கு கொடூரமான தண்டனை வழங்கப்பட்டது. அதனை அவர் அனுபவித்தார். காலையில் அனைவர் முன்னிலையிலும் நிர்வாணமாக குளிக்க வேண்டும். இந்த மனிதன் படித்தது எங்கே? வாழ்ந்தது என்ன? சிந்தனை என்ன? சிறையின் அமைப்பே உங்களையும், ஆன்மாவையும் கொன்றுவிடும். ஆன்மாவில் இருந்தே உங்களை கொன்று விட வேண்டும் என்று தான் சிறை அமைப்பை உருவாக்குகிறார்கள். உங்கள் ஆன்மாவை கொன்றுவிட்டால், உங்கள் சிந்தனை எல்லாத்தையும் கொன்றுவிடுவோம் என்பது தான் அந்தமான் சிறைச்சாலை. அறிவியல் பூர்வமாக இந்த சிறைச்சாலை உருவாக்கப்பட்டது.
சாவர்க்கர் பிறக்கும் போது சித்தாந்தம் ஆரம்பிக்கவில்லை. அவர் காலமானபோது முடிந்துவிடவில்லை. எந்த ஒரு அரசியல்வாதிக்கும், சித்தாந்தவாதிக்கும் இல்லாத ஒரு பாதையை அவர் தீர்மானித்தார். 82 வயதில் இறக்க முடிவு செய்து 26 நாட்கள் எந்த உணவையும் அவர் உண்ணவில்லை. சித்தாந்தம் இத்துடன் நிற்கவில்லை. இதை விட பெரியது.
சாவர்க்கர் பிராமணர் ஆக இருந்த காரணத்தினால், தமிழகத்தில் நிராகரிக்கப்பட்டாரா என்ற கேள்வியை நான் கேட்கிறேன். அவர் கூட இருந்த நண்பர்கள் எப்படிப்பட்ட மனிதர்கள் என்பதற்காக நிராகரிக்கப்பட்டாரா? அதற்காக சரித்திரத்தை திருப்பிப் பேசுவார்களா? 50 ஆண்டு காலம் ஒரு கட்சி ஆட்சியில் இருந்தது. அவர்கள் எழுதியது தானே புத்தகம். அகில இந்திய அளவில், தமிழகத்தில் நீங்கள் எழுதியது தானே கதை. தென்னை மரத்தை வெட்டினார்கள் என்று நீ சொன்னால் நம்பத்தானே வேண்டும். அதை யார் பார்த்தார்கள். அதிலும் எத்தனை தென்னை மரத்தை வெட்டினார்கள் என்பதை நீங்கள் சொன்னால் தான் உண்டு. மற்றவர்களுக்கு தெரியாது. கோயிலை இவர்கள் போய் திறந்து வைத்தார்கள் என நீங்கள் சொன்னால் தானே? இதனை ஆறு ஏழு தலைமுறையினர் படித்துவிட்டார்கள். இதை படித்து ஐடி பொறியாளர், டாக்டர், அரசியல்வாதி ஆகிவிட்டனர். ஒரு புத்தகத்தை கையில் வைத்து கொண்டு கல்வித்துறையை வைத்து கொண்டு வீர சாவர்க்கருக்கு மிகப்பெரிய அநியாயம் தமிழகத்தில் நடந்துள்ளது. திறந்த மனதுடன் வீரசாவர்க்கரை படிக்க வேண்டும். உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு பிடிக்காது என முடிவு செய்யக்கூடாது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.