முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே!

மராட்டிய முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே நேற்று ராஜினாமா செய்தார். நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்திக்காமலேயே அவர் பதவி விலகினார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் சிவசேனாவுக்கு எதிராக அக்கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் அரசு பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, மகாராஷ்டிர சட்டசபையில் நாளை சிறப்பு கூட்டத்தை கூட்டி மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவுக்கு மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரி உத்தரவிட்டு, அதனை அவர் கடிதமாகவும் அனுப்பி இருந்தார்.

ஆளுநரின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிவிட்டனர். இதையடுத்து நேற்றிரவு (ஜூன் 29) ஃபேஸ்புக் நேரலையில் உரையாற்றிய உத்தவ் தாக்கரே, முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். சட்ட மேலவை பதவியில் இருந்தும் விலகுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமக்கு யார் மீதும் வருத்தம் இல்லை என்று கூறிய அவர், கூட்டணி ஆட்சியில் பங்கெடுத்து தமக்கு ஆதரவு அளித்த தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வெளியான சிறிது நேரத்திலேயே தனது ராஜினாமா முடிவை உத்தவ் தாக்கரே வெளியிட்டார். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க விரும்பவில்லை என்று கவர்னருக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்ததுடன், தனது ராஜினாமா கடிதத்தையும் கவர்னருக்கு அனுப்பிவைத்தார். உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை கவர்னரும் உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று மாலையில் மந்திரி சபை கூட்டத்தை கூட்டி, இதுநாள் வரை ஒத்துழைப்பு கொடுத்த தனது மந்திரி சகாக்களுக்கும், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் நன்றி தெரிவித்தார். ஆனால் சொந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் தன்னை கைவிட்டு விட்டதாக வேதனை தெரிவித்தார்.

இதற்கிடையே கவுகாத்தி ஓட்டலில் தங்கியிருந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், அந்த ஓட்டலை காலி செய்து இரவில் கோவா சென்றடைந்தனர். அங்கிருந்து இன்று காலை மும்பை வருகிறார்கள். தனக்கு சுயேச்சைகள் உள்பட 50 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக அதிருப்தி அணியின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். கட்சிகளின் பலம் 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபையில் ஒரு எம்.எல்.ஏ. உயிரிழந்ததை அடுத்து, தற்போது அதன் பலம் 287 ஆக உள்ளது. உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஆனால் அவரது அணிக்கு 117 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டும் உள்ளது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே உத்தவ் தாக்கரே பதவி விலகி உள்ளார்.