அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது!

அமர்நாத் புனித யாத்திரை நேற்று தொடங்கியது. காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா நேற்று தொடங்கி வைத்தார்.

காஷ்மீரில் புகழ்பெற்ற அமர்நாத் புனித யாத்திரை, கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு நடைபெறுகிறது. இந்நிலையில் அமர்நாத் குகைக் கோவிலுக்குச் செல்லும் முதலாவது குழுவின் பயணத்தை காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா நேற்று தொடங்கிவைத்தார். ஜம்மு நகரில் உள்ள பகவதிநகர் முகாமில் இருந்து புறப்பட்ட 4 ஆயிரத்து 890 பக்தர்களின் 176 வாகனங்களை அவர் கொடியசைத்து தொடங்கினார்.

பகல்காம் மற்றும் பதால் அடிவார முகாம்களை அடையும் அந்த பக்தர்கள் குழுவினர், அங்கிருந்து தங்கள் 43 நாள் புனித யாத்திரையை இன்று (வியாழக்கிழமை) தொடங்குவார்கள். வருகிற ஆகஸ்டு 11-ந் தேதி ரக்ஷா பந்தன் தினத்தன்று இந்த யாத்திரை நிறைவுபெறும். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கு 3 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பதிவு செய்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த யாத்திரையையொட்டி காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமர்நாத் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர், அமர்நாத் யாத்திரை தொடங்குவதை முன்னிட்டு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 43 நாள் வருடாந்திர அமர்நாத் யாத்திரை ஜூன் 30 அன்று தொடங்குகிறது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் கமாண்டர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முயற்சிப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கடந்த வாரம் மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாதுகாப்பான யாத்திரையை உறுதிசெய்யும் வகையில், அமர்நாத் கோவிலுக்கு செல்லும் வாகன வழித்தடங்களில் 130க்கும் மேற்பட்ட மோப்ப நாய்களை பயன்படுத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் அமர்நாத் யாத்திரை செல்லும் வழியில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் இந்த என்கவுன்டர் நடந்துள்ளது. என்கவுன்டர் குறித்து காஷ்மீர் காவல் துறை ஐஜி விஜய் குமார் கூறுகையில், “என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளும் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். அமர்நாத் யாத்திரை செல்லும் வழியில் இந்த என்கவுன்டர் நடைபெற்றது” என்றார்.