தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷனுக்கு வழிவகுக்கும்: அண்ணாமலை

தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷனுக்கு வழிவகுக்கும் என்று, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிக்காக காத்திருக்கிறார்கள். இவர்களில் முதல் முறையும், 2-வது முறையும், ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதியவர்கள் இருக்கிறார்கள். 30 ஆயிரம் ஆசிரியர்கள் தகுதியுடன், பணிக்காக காத்திருக்கும்போது, இவர்களையெல்லாம் பணி நியமனம் செய்யாத அரசு, தற்போது தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத நபர்களை கொண்டு ஆசிரியர் பணி இடங்களையெல்லாம் நிரப்பப்போவதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷனுக்கு வழிவகுக்கும். தற்காலிக பணி நியமனத்தில் அதீத ஆர்வம் காட்டுவது ஏன்?.

மாநில அரசு, கல்வித்துறையின் அறிக்கையை உடனடியாக வாபஸ் பெற்றுக் கொண்டு தகுதி வாய்ந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு எழுதி தகுதி பெற்று பணிக்காக இருக்கும் இளைஞர்களை, அந்த பணியிடங்களில் முறைப்படி காலமுறை ஊதியத்துடன் நியமிக்க வேண்டும். எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத மாநில அரசு, இந்த வாக்குறுதியையாவது நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் அண்ணாமலை டுவிட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் நிகழ்ந்த கொடூரமான கொலைச் சம்பவம் நாடெங்கும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் அவா்களது நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள சட்டம், ஒழுங்கு தடம் புரண்டுள்ளதற்கு, அந்த மாநில முதல்வா் மற்றவா்களைக் குறை கூறுகிறாா். பிரதமா் மோடியின் எண்ணம், செயல்திட்டம் மற்றும் செயல்பாடுகள் ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாகவே உள்ளது. ஆனால், தேச வளா்ச்சியை வெறுக்கும் முகம் கொண்டவா்களோ தொடா் தோல்வியிலிருந்து மீளப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு வருகின்றனா். இவ்வாறு அவர் கூறியுள்ளாா்.