ஆளுநருடன் முரண்பட்டு அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்படும் போக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் கைவிட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
இன்று தொடங்கிய தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதற்கு, தமிழக அரசுக்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநர் உரையுடன் தொடங்குகின்ற சட்டப்பேரவை நிகழ்வின்போது, அனைத்து மாநிலங்களிலும் தேசிய கீதம் ஒலிக்கச் செய்வது இயல்பு மற்றும் நமது கடமை ஆகும். ஆனால், தமிழக சட்டப் பேரவையில் மட்டும் தமிழக ஆளுநருக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பதற்காகவே, தொடர்ந்து தேசிய கீதம் அவமதிக்கப்படுவது போன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
தமிழக மக்களின் நலனுக்கு தேவையான ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுவதை விடுத்து, இதுபோன்ற தேவையற்ற அரசியல் செய்து கொண்டிருக்கும் இந்தப் போலி திராவிட மாடல் அரசு, தேச விரோதமாக நடந்து கொள்வது ஏற்கத்தக்கதல்ல. மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் இசைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தும் அதை ஏற்க மறுத்த சபாநாயகர் அப்பாவுவின் போக்கு மிகுந்த கண்டனத்துக்கு உரியது.
சபாநாயகர் என்பவர் சட்டசபையில் பொதுவானவராகவே செயல்பட வேண்டுமே தவிர, திமுக என்ற ஒரு கட்சிக்கு ஒற்றை சார்பாளராக இயங்குவது நியாயமற்ற ஒன்றாகும். தமிழக ஆளுநருடன் முரண்பட்டு அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்படும் போக்கை தமிழக முதல்வர் ஸ்டாலின் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.