திமுக எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டுமா?: சீமான்!

“திமுக எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டுமா? இவ்வளவு பொய் பேச வேண்டுமா என்று அவர் படிக்காமல் சென்றுவிட்டார்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

வடலூரில் தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் இன்று ( ஜன.8) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

அண்ணா பல்கலை.யில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மாணவியின் தகவல்கள் வெளிவந்த நிலையில் இதுவரை குற்றவாளியின் வாக்குமூலம் என்ன, அவரது பின்புறம் என்ன என்பது குறித்து தகவல் வெளியிடாதது ஏன்?

ஆளுநரை எதிர்த்து நீங்கள் போராடுவதே மற்ற போராட்டங்களையும் பிரச்சினைகளையும் திசை திருப்புவதற்குதான். உங்கள் உரையை நீங்களே எழுதிக் கொள்வீர்களா? நீங்கள் எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டுமா, இவ்வளவு பொய் பேச வேண்டுமா என்று அவர் படிக்காமல் சென்று விட்டார். நீங்கள் எழுதி கொடுத்ததை படிப்பதற்கு அவர் திமுகவிலேயே சேர்ந்துவிடலாம்.

பொங்கல் பரிசு என்பது முதலில் ரூ 5,000 ஆகவும் பிறகு ரூ.2,500 ஆகவும் பிறகு 1,000 ஆகவும் இருந்தது. தற்பொழுது ரூ.103-க்கு வந்துள்ளது. அது ரூ.3-க்கு வரும். முன் நாம் விழித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நெற்றியில் ஒற்றை ரூபாயை ஒட்டி புதைத்து விடுவார்கள். மற்றவர்களின் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கிறீர்கள், ஆனால் நீங்கள் ஆளுநரை எதிர்த்து நினைத்த இடத்தில் போராட்டம் நடத்துகிறீர்கள். ஆளுநர் செய்த செயல் போராடும் அளவிற்கு குற்றம் என்றால் மாணவி பாதிக்கப்பட்டதுக்கு போராட வேண்டிய அவசியம் இல்லையா? ஏன் அதற்கு அனுமதி மறுக்கிறீர்கள்.

தமிழ் தேசியத்தின் சிதறிய எச்சில் தான் திராவிடம். நான் 50,000 ஆண்டுகளுக்கு மூத்தவன். இந்தியா நிலப்பரப்பு முழுமைக்கும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழை தாய்மொழியாக கொண்ட நாகர்கள் தான் என்று அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளதை ஏற்கிறீர்களா? இல்லையா? இந்த நாட்டை என் நாடு என்று சொந்தம் கொண்டாட ஒரேயொரு இனத்துக்கு தான் உரிமை உண்டு. அது தமிழர்களுக்கு தான் என்று சொன்னதை ஏற்கிறீர்களா? இல்லையா? அவர் ஏன் திராவிடர்கள் என்று சொல்லவில்லை. உலகின் முதல் மொழி தமிழ் என்றால் மூத்த மாந்தன் தமிழன் தானே. இதனை நாட்டின் முதன்மை அமைச்சர் மோடியே ஊர் ஊராக போய் சொல்லி வருகிறார். அப்படியென்றால் இடையே திராவிடம் எங்கே வருகிறது.

முதலில் திராவிடம் என்பது தமிழ் சொல்லா? தமிழ் ஒரு காண்டுமிராண்டி மொழி. தமிழ் தாய்க்கு கொம்பா இருக்கு? தமிழ் தாய் மூவாயிரம் ஆண்டுகளாக என்ன படிக்க வைத்தார்? என்று கேட்டவர் பெரியார். திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பட்டு, பரிபாடல், சங்க இலக்கியங்களை எல்லாம் எழுதி கொடுத்தவர்கள் எல்லாம் தமிழ் படிக்கவில்லையா? தமிழை சனியன் என்று சொன்ன பெரியார் எந்த மொழியில் எழுதினார்? தமிழில் தானே எழுதினார். எங்கள் மொழியையே இழிவாக பேசிவிட்டு அப்புறம் என்ன சமூக மாற்றம், சீர்த்திருத்தம், அரசியல் இருக்கு? அடிப்படையே தவறாக இருக்கிறது. என்னுடைய ஆகச்சிறந்த வாழ்வியல் நெறியாக திருக்குறள் உள்ளது. அதனை கழிவு என்று சொல்லிவிட்டீர்கள். கம்பன் ஒரு எதிரி. இளங்கோவடிகள் ஒரு எதிரி. திருவள்ளுவர் ஒரு எதிரி. என்னுடைய எல்லாவற்றையும் குப்பை என்று சொன்னவர் பெரியார். அவரை கொள்கை வழிகாட்டி என்று எப்படி சொல்ல முடியும்.

உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ, அவர்களுடன் உறவு வைத்து கொண்டு சந்தோஷமாக இரு என்று கூறியது பெண்ணிய உரிமையா?. மதுவுக்கு எதிராக 1000 தென்னை மரங்களை வெட்டினார். அவரை பகுத்தறிவுவாதி என்று தானே சொல்கிறீர்கள். என் தோப்பில் கள் இறக்க அனுமதியில்லை என்று சொல்வது தான் அறிவு உள்ளவரின் செயல். மரத்தை வெட்டி சாய்த்தது பகுத்தறிவா? உலகில் எந்த நாட்டில் மது இல்லை. மது குடிக்க வேண்டாம் என்பது கட்டிய மனைவியுடன் படுக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். சமூக நீதிக்கும் பெரியாருக்கும் சம்பந்தம் இருக்கா? சமூக நீதிக்கும் ஆனைமுத்துவுக்கும் சம்பந்தம் இருக்கா? சமூகநீதியை போராடி பெற்றுக்கொடுத்தது பெரியாரா? ஆனை முத்துவா?.

வடலூர் வள்ளலார் பெருவெளியில் மக்கள் நின்று தரிசனம் செய்யக்கூடிய இடத்தில் ஆராய்ச்சி மையம் கட்டுவது ஏற்புடையது அல்ல. வள்ளலாருக்கு நீங்கள் பண்பாட்டு மையம் கட்டுவதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதை வேறு இடத்தில் செய்ய வேண்டும். இந்த அரசு எப்பொழுதுமே வேண்டும் என்பதை செய்வதில்லை. எதை வேண்டாம் என்று சொல்கிறோமோ அதைத்தான் செய்கிறது. பெருவெளியில் ஆராய்ச்சி மையம் கட்ட முடியாது, டங்ஸ்டன் சுரங்கம் தோண்ட முடியாது விடமாட்டோம். ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக வேட்பாளர் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.