இன்றைக்கு முதல்வர் குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பு இல்லை என அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.
தாம்பரம் அடுத்த இந்திரா நகரில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி திருக்கோயிலில் தனது 62-வது பிறந்தநாளை முன்னிட்டு அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு அமமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்பு செம்பாக்கத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் 1000-க்கு நலத்திட்டங்கள் உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி பொது மக்களோடு உணவு அருந்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
யார் அந்த சார் என்பதில் கோட நாட்டில் நடைபெற்ற கொலை கொள்ளைக்கு பின்னால் அந்த சார் யார் என்ற கேள்வி உண்டு. எல்லா சாரையும் கண்டுபிடிக்கும் கட்டாயம் காவல் துறைக்கு உண்டு. வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி இன்னும் வலிமை பெற்ற கூட்டணியாக, மக்கள் விரோத சக்தியான திமுகவை வீழ்த்துகின்ற கூட்டணியாக வலிமை பெறும்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இதுவரை கேள்விப்படாத அளவிற்கு அதிகரித்து வருகிறது அதற்கு அடிப்படை காரணம் போதை மருந்து பழக்கம். இன்றைக்கு முதல்வர் குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலைக்கு போய் கொண்டு இருக்கிறது. அது போல இந்த ஆட்சியில் ஐந்து மடங்கு விலைவாசி உயர்ந்துள்ளது. திமுக கூட்டணியில் எண்ணிக்கையில் கட்சி இருந்தாலும் அவர்கள் திமுகவுடன் சேர்ந்திருப்பதால் மக்கள் அவர்களையும் புறம்தள்ளப்போகிறார்கள் என்பதுதான் 2026 தேர்தலில் நடைபெற உள்ளது.
ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களாக உணர்பவர்கள் இரட்டை இலை சின்னம் யாரிடமோ இருக்கிறது. அந்த கட்சியின் பெயர் எங்கே இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு தங்களை தாங்களே ஏமாற்றாமல் அந்த சுயநலவாதிக்கு காவடி தூக்காமல் உண்மையை உணர்ந்து செயல்படவில்லை என்றால் 2026 தேர்தலுக்கு பிறகு இரட்டை இலை சின்னமும் அந்த கட்சியும் முடிவுரை எழுதப்பட்டு ஒரு சிலரின் சுய நலத்தால் திமுகவுடன் கள்ள கூட்டணி வைத்திருக்கின்றர். தேர்தல் வெற்றிக்காக மறைமுகமாக உதவி செய்கின்ற பழனிசாமி போன்றவர்களின் கைப்பாவைகளாக இருந்தீர்கள் என்றால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கட்டிகாத்த கட்சி வருங்காலத்தில் மிக மோசமான தோல்விகளை சந்திக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.