பொங்கல் நாட்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேர்வு: சசிகாந்த் எம்பி கடிதம்!

பொங்கல் விடுமுறை நாட்களான ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி பருவத் தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேந்திரிய வித்யாலயா ஆணையருக்கு காங்கிரஸ் கட்சி எம்.பி சசிகாந்த் செந்தில் கடிதம் எழுதியுள்ளார்.

பொங்கல் பண்டிகையின் போது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நடைபெற உள்ள பருவ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லியில் உள்ள கேந்திரிய வித்யாலயா ஆணையருக்கு திருவள்ளூர் தொகுதி எம்பியான சசிகாந்த் எம்பி கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

இந்தக் கடிதத்தில் உள்ள தகவல்கள் உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று நம்புகிறேன். கடந்த ஜனவரி 2ம் தேதி வெளியிடப்பட்ட தேர்வுச் சுற்றறிக்கையின்படி (சுற்றிக்கையை இணைத்துள்ளார்) கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு சமீபத்தில் திட்டமிடப்பட்ட பருவத் தேர்வுகள் II/III தொடர்பான முக்கியமான கவலையை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்று இந்த கடிதத்தை நான் எழுதுகிறேன். பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 13 முதல் 17 வரை கொண்டாடப்படுகிறது, இது தமிழர்கர்களின் மிகப்பெரிய கலாச்சாரம் மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்தது. இது இயற்கை, விவசாயிகள் மற்றும் கால்நடைகளுக்கு எல்லாம் அறுவடைக்கு நன்றி தெரிவிக்கும் பண்டிகையாகும். பொங்கல் என்பது ஒரு பண்டிகை மட்டுமல்ல, குடும்பங்களையும் சமூகங்களையும் கொண்டாட்டத்தில் ஒன்றாகக் கொண்டுவரும் ஆழமான வேரூன்றிய பாரம்பரியமாகும். ஆகவே, இந்த காலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

குறிப்பாக மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பொங்கல் திருவிழாவுடன் தொடர்புடைய பல்வேறு சடங்குகள் மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சிகளை தீவிரமாக பங்கேற்பார்கள். தற்போதைய தேர்வு அட்டவணையில் பொங்கலின் முக்கிய நாட்களை ஒட்டி வரும் ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தேர்வுகள் மற்றும் வழக்கமான வகுப்புகளை நடத்துவது மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் திருவிழாவில் முழுமையாக பங்கேற்கும் திறனை சீர்குலைத்து, தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

எனவே இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு, பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, திட்டமிடப்பட்ட தேர்வுகளை நடத்துமாறு கேந்திரிய வித்யாலயா அலுவலகத்தை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தேர்வுகளை ஒத்திவைத்தால் தமிழ் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் கலாச்சார நம்பிக்கைகள் மீது காட்டும் தங்களின் அக்கறையை பிரதிபலிக்கும். அத்துடன் கல்வி அட்டவணையை மாற்றினால் கொண்டாட்டத்திற்கு தடைகள் ஏற்படாது என்பது உறுதியாகும். எனவே இந்த விஷயத்தில் மத்திய அரசு ம் உரிய கவனம் செலுத்தி, கேந்திரிய வித்யாலயாக்களின் கல்வி முன்னுரிமைகளைப் பேணுவதுடன், தமிழ்நாட்டின் கலாச்சார மரபுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் முடிவெடுக்கும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன். இவ்வாறு சசிகுமார் செந்தில் எம்பி கடிதத்தில் கூறியுள்ளார்.