பாஜகவுக்கு தமிழகத்தில் அது சாத்தியமாகவில்லை: யஷ்வந்த் சின்ஹா

பல மாநிலங்களில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் பாஜகவுக்கு தமிழகத்தில் அது சாத்தியமாகவில்லை என ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா கூறினார்.

ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன் முடிவுகள் ஜூலை 21-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு,டெல்லியில் என்சிபி தலைவர் சரத் பவார் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்த ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து ஆதரவு கோரினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா பேசியதாவது:-

சமீப காலமாக ஆளுநர்கள் தங்கள் கடமையை மீறி செயல்படுகின்றனர். ஆளுநர்கள் மாநில அரசியலில் தலையிடுகிறார்கள். அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பிரிவும் உடைக்கப்படுகிறது. பல மாநிலங்களில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் பாஜகவுக்கு தமிழகத்தில் அது சாத்தியமாகவில்லை. தமிழகத்தில் பாஜகவால் எதுவும் செய்ய முடியவில்லை. நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் நாம் உள்ளோம். மராட்டிய மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலையே அதற்கு சாட்சி.

மகாராஷ்டிரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் அதிர்ஷ்டசாலிகள். இங்கு நிலைத்த ஆட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மத்திய அரசால் இதனை ஒன்றும் செய்ய முடியவில்லை. தேர்தல் பத்திரங்கள் மூலம் அனைத்து நன்கொடைகளும் பாஜகவிற்கு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. நான் குடியரசுத் தலைவரானால் அரசு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுப்பேன்.

மாநிலங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஆளுநரின் அதிகாரங்கள் மூலம் மாநிலங்கள் பந்தாடப்படுகின்றன. ஆளுநர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டவர்கள் போல் அல்லாமல் பாஜகவின் ஏஜெண்டுகள் போல செயல்படுகின்றனர். சமூக வலைத்தளத்தில் ஒருவர் என்னிடம் பகிர்ந்த ஒரு செய்தியில் பிரதீபா பாட்டில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தபோது அவர் எழுந்து தனது மனுவை தேர்தல் அதிகாரியிடம் வழங்கினார். அப்போது மன்மோகன் சிங், சோனியா காந்தி உள்ளிட்டோர் அருகில் அமர்ந்திருந்தனர். ஆனால் தற்போது குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு வேட்புமனுவைத் தாக்கல் செய்யாமல் பிரதமர் மோடி தேர்தல் அதிகாரியிடம் நேரடியாக வழங்குகிறார். இன்றைய காலத்தில் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும் எனும் அவசியம் எழுந்துள்ளது.

இன்றைக்கு நடந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரின் ஆதரவுடன் நான் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை உள்ளது. நான் அனைத்து கட்சிகளிடமும் ஆதரவு கேட்டு வருகிறேன்.ஒரு வேட்பாளராக பாஜகவை சேர்ந்தவர்களிடமும் நான் வாக்கு கேட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஜனாதிபதி தலைவர் தேர்தலில் போட்டியிடும் உன்னதமான உயர்ந்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு வாழ்த்துக்கள் என்றார்.