பல்லடம் 3 பேர் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை வைத்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பல்லடம் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா விருப்பப்பட்டால் கூட மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ தமிழகத்தில் எந்த ஒரு வழக்கிலும் விசாரணை நடத்த முடியாது. பெண்கள், குழந்தைகள் மீது நடக்கும் கொடூர செயல்களை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. சென்னையில் தான் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும். தினந்தோறும் எதோ ஒரு பிரச்சினைக்காக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டு இருக்கின்றன. ஆனால் மக்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இன்று இங்கு கொடுவாய் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். எந்த குற்றமும் செய்யாத அந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தோட்ட வேலை செய்து வரும் அவர்கள் மகனை படிக்க ஐடி கம்பெனியில் வேலை பெற்று சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு முன்னேறிக்கொண்டு இருந்தபோது, அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களுக்கு நீதி கொடுக்கவில்லை என்றால் எதற்காக நாம் பொது வாழ்வில் இருக்க வேண்டும்.
எப்போதும் காவல்துறையை பற்றி தவறான வார்த்தையை பேசும் நபர் நான் இல்லை. நானும் காவல்துறை உப்பை சாப்பிட்டு இருக்கிறேன். அவர்கள் செய்யும் குற்றத்தை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சப் இன்ஸ்பெக்டர் வேலைக்கு கடந்த ஆண்டில் ஆள் எடுக்கவில்லை. இதேபோல் கான்ஸ்டபிள் வேலைக்கும் ஆள் எடுக்கவில்லை. தமிழகத்தில் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் ஆள் பற்றாக்குறை உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு காவல்துறையில் இருந்து காவலர்கள் ரிட்டைர்டு ஆகிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஆட்சேர்ப்பு பணிகள் நடப்பதில்லை. இதனால் காவல்நிலையங்களில் ஆள் பற்றாக்குறை உள்ளது. இரவு ரோந்து வர முடியவில்லை. மக்களை பார்க்க முடியவில்லை. ஒரு பெட்டிசன் கொடுக்க வேண்டும் என்றால் கூட 4 மணி நேரம் ஆகின்றது. பாதி நேரங்களில் அங்கு போராட்டம் நடக்கிறது அங்கே செல்லுங்க.. திருப்பூரில் போராட்டம் நடக்கு அங்கே செல்லுங்கள் என்று அனுப்பி வைக்கப்படுகிறார்கள். பாதி நேரம் இப்படித்தான் நடக்கிறது. அப்போ என்ன ஆகின்றது, குற்றச் செயல்களில் யார் ஈடுபடுகிறார்களோ அவர்களை பிடிப்பதற்கு போலீசாருக்கு கவனம் கொடுக்க முடியவில்லை. குற்றம் நடந்த பிறகு கண்டுபிடிக்க சுத்தமாக முடிவதில்லை. இப்படியே நடந்துகொண்டு இருந்தால், ஒரு பெண், குழந்தை 8 மணிக்கும் மேல் எப்படி பயமின்றி செல்ல முடியும். இது எல்லாத்துக்கும் சேர்த்து தான் இந்த கண்டன ஆர்ப்பாட்டம்.
காவல்துறைக்கு தயவு செய்து அதிகாரம் கொடுங்க. வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிடுங்கள். காவல்துறைக்கு ஆட்களை சேருங்கள். அந்த காலத்தில் ஒரு கொலை வழக்குக்கே சிபிஐ கொடுத்துவிடுவாங்க. ஆனால் இங்க 3 பேர்.. இந்த பகுதியில் தொடர்ந்து கொலைகள் நடக்கின்றன. பல்லடம் மூவர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.