பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 80. கேரள திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
தென்னிந்திய அளவில் பிரபலமான பின்னணிப் பாடகராக அறியப்பட்டவர் மலையாளத் திரையுலகை சேர்ந்த பாடகர் பி.ஜெயச்சந்திரன். தமிழில் மூன்று முடிச்சு, அந்த 7 நாட்கள், வைதேகி காத்திருந்தாள், இணைந்த கைகள் உள்ளிட்ட பல படங்களில் வசந்தகால நதியினிலே, கவிதை அரங்கேறும் நேரம், காத்திருந்து காத்திருந்து, அந்திநேர தென்றல் காற்று போன்ற பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் சுமார் 16,000 பாடல்களைப் பாடியுள்ளார்.
சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய திரைப்பட விருது, கேரள மாநில திரைப்பட விருதுகள், கேரள அரசின் ஜே.சி. டேனியல் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்டவற்றைப் பெற்றுள்ளார். நான்குமுறை தமிழ்நாடு மாநில விருதுகளை பாடகர் ஜெயச்சந்திரன் வென்றுள்ளார்.
ஜெயச்சந்திரன் மறைவுக்கு திரை நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். கவிஞர் வைரமுத்துவும் ஜெயச்சந்திரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
பாடகர் ஜெயச்சந்திரன்
காலமானார் என்ற செய்தியால்
கண்கள் நீர்கட்டின
‘கொடியிலே மல்லிகைப்பூ’
மறக்க முடியுமா?
‘தெய்வம் தந்த பூவே’
காற்றில் கரையுமா?
‘என்மேல்விழுந்த
மழைத்துளியே’
மண்ணில் மறைந்துபோகுமா?
எத்துணை எத்துணை பாடல்கள்
அத்துணையும் முத்துக்கள்
பழக இனியவர்;
பண்பாளர்
அவரை நான்
ஏழைகளின் ஜேசுதாஸ்
என்பேன்
அவர்
உடல் மறைந்தாலும்
குரல் மறையாது
‘இன்று எழுதிய என்கவியே
இனிமேல் உன்னை
எவர் இசைப்பார்’
கனத்த மனத்தோடு
அஞ்சலியும்
ஆழ்ந்த இரங்கலும்… என்று வைரமுத்து பதிவிட்டுள்ளார்.