நடிகை ஹனி ரோஸ் புகார்: தொழிலதிபர் பாபி செம்மனூருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்!

நடிகை ஹனிரோஸ் அளித்த புகாரில் கைதான பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்க எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலையாள நடிகை ஹனி ரோஸ். 2005ம் ஆண்டு 14 வயதில் பாய் பிரண்ட் என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பலவேறு படங்களில் நடித்து உள்ளார். தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். தெலுங்கில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் வீரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து ஆந்திராவில் பிரபலமானார். நடிகை ஹனி ரோஸுக்கு சினிமாவில் பெரியளவில் அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும், அவரின் கவர்ச்சியால் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். பல வணிக நிறுவனங்கள், கடைகள் திறப்புவிழாவில் கலந்து கொள்கிறார்.

இந்த சூழலில், சமீபத்தில் தொழிலதிபர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக நடிகை ஹனிரோஸ் கேரளா எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கொச்சி சென்ட்ரல் ஸ்டேஷன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு, நேற்று தொழிலதிபர் பாபி செம்மனூரை காவலில் எடுத்து விசாரித்தது. மேலும், அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. விசாரணையின் முடிவில் தொழிலதிபர் செம்மனூரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், நடிகை ஹனிரோஸ் அளித்த புகாரில் கைதான பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்க எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.