பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை, இளமைக் காலம், கல்வி, அரசியல் போட்டி, மன அழுத்தத்தை எதிர்கொண்ட விதம், தோல்விகள், சவால்களை எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக்கொண்டது என பல விஷயங்களையும் இந்த இரண்டு மணி நேர நேர்காணலில் அவர் பகிர்ந்துகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நிகில் காமத்துடன் பல்வேறு விஷயங்களைப் பேசிய நேர்காணலை மிக மகிழ்ச்சியுடன் உருவாக்கியுள்ளோம். நிச்சயம் பார்த்து மகிழத்தக்கதாக இருக்கும் என்று கூறி, விடியோவையும் பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இணைத்துள்ளார்.
பீப்பிள் பை டபிள்யுடிஎஃப் என்ற பெயரில் நிகில் காமத் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதில் பல்வேறு பிரபலங்களை அழைத்து வந்து நேர்காணல் நடத்தி அதனை வெளியிடுவார். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி இதில் பங்கேற்றுள்ளார். இந்த நேர்காணலின் டிரெய்லரை நிகில் காமத் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட அதனை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ரீடிவீட் செய்திருக்கிறார் பிரதமர் மோடி.
இந்த டிரெய்லரில், பிரதமர் மோடி தவறுகள் தவிர்க்க முடியாதது, நானும் கூட நிறைய தவறுகள் செய்திருக்கலாம், நானும் ஒருமனிதன்தான், கடவுள் அல்ல என்று கூறுவது இடம்பெற்றுள்ளது. தனக்கு பதற்றமாக இருப்பதாக நிகில் காமத் கூறுவதும், அதனைக் கேட்ட பிரதமர் மோடி சிரித்தபடி, இது என்னுடைய முதல் பாட்காஸ்ட். உங்கள் பார்வையாளர்களிடம் இது எப்படி சென்றடையப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை என்று கூறியிருப்பதும் வெளியிடப்பட்டுள்ளது.