சீமான் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பெரியார் குறித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் உள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக வரும் 20ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடலூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசிய போது, உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, சகோதரியோ.. அவர்களுடன் உறவு வைத்து கொண்டு சந்தோஷமாக இரு என்று கூறியது தான் பெண் உரிமையா? என்று பேசி இருந்தார். இதனைத் தொடர்ந்து தபெதிக உள்ள அமைப்புகள் சீமானுக்கு எதிராக கடுமையான போராட்டத்தை முன்னெடுத்தன. நீலாங்கரையில் அமைந்துள்ள சீமானின் வீட்டினை முற்றுகையிடும் முயற்சிகளும் நடந்தன. இதன்பின் திமுக தரப்பில் பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்தார். அதேபோல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இதனிடையே சீமானுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல் பெரியார் அப்படி பேசியதற்கான ஆதாரத்தை கேட்டும் பல்வேறு அமைப்புகளும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் சீமான் கைது செய்யப்படுவாரா என்ற பேச்சுகள் எழுந்தன.

இந்த நிலையில் மதுரை கேகே நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை வெளியிட்டார். அவரின் கருத்து சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. சமூக நீதிக்காகவும், தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட பெரியார் குறித்து அடிப்படை ஆதாரமின்றி சீமான் பேசி இருக்கிறார். இதுதொடர்பாக புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. ஆகவே, புகாரின் அடிப்படையில் அண்ணா நகர் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பெண் கல்வி, பெண் உரிமைக்காக சேவையாற்றி இருக்கிறார். அவர் குறித்து சீமான் அவதூறாக பேசியது ஏற்கத்தக்கதல்ல. அதனால் சீமான் மீது குற்றவியல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நீதிபதி, சீமான் தெரிவித்த கருத்துகள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் உள்ளன. எனவே இந்த விவகாரம் தொடர்பாக மதுரை அண்ணா நகர் காவல்துறையினர் மனுதாரரின் புகாரை பெற்று கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை வரும் 20ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்திருக்கின்றனர்.