சென்னை கிண்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்தித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. தொடர்ந்து. இதில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னை கிண்டி ராஜ் பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் ரவியிடம், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநர் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-
விஜயகாந்த் குரு பூஜை பேரணிக்கு 20 நாட்களுக்கு முன்பே காவல்துறையிடம் அனுமதி கேட்ட நிலையில், ஒரு நாளுக்கு முன்பாக அனுமதி மறுத்தார்கள். ஆனாலும், அமைதியான முறையில் பேரணியை நடத்தி முடித்தோம்.
தமிழ்நாடு முழுக்க மக்களுக்கு பொங்கலுக்கு ரூ.1000 வழங்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும் என தேமுதிக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அமைதியான முறையில் நாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். சுதீஷ் உட்பட 120க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், திமுக மட்டும், ஆளுநருக்கு எதிராக முதல் நாள் ஆர்ப்பாட்டம் அறிவித்துவிட்டு, மறுநாள் நடத்துகிறார்கள். இது எந்த வகையில் நியாயம்? எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த ஏன் அனுமதி தரப்படவில்லை? நாங்கள் போராட்டம் நடத்தக்கூடாது என்றால் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் உண்மையைக் கொண்டுவர திமுக அரசு ஆர்வம் காட்டவில்லை. ஞானசேகரன் திமுக அனுதாபி தான் என முதல்வர் ஸ்டாலின் கொஞ்சம் கூட அசிங்கம் இல்லாமல் ஒப்புக்கொள்கிறார். திமுக அனுதாபிக்கு இவர்கள் எப்படி தண்டனை வாங்கிக் கொடுப்பார்கள்? இதுதொடர்பாக ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் மேலூரில் வராது என மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். மேலூர் தாலுகாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும் அறிவிக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தி இருக்கிறோம். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.