டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிடப்படுவது தொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் ஒரு வாரத்தில் அறிவிப்பார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஏ.வல்லாளப்பட்டி மந்தை திடலில், டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் மக்களிடம் நேற்று பேசிய அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருவது குறித்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் தெரிவித்தோம். இந்த திட்டத்துக்கு மாநில அரசு ஒப்புதல் கொடுக்க வேண்டாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் பிறகும் போராட்டம் தொடர்வதால், மக்களை சந்திக்க வந்துள்ளோம்.
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி வரும் 17, 18, 19-ம் தேதிகளில் சென்னை வருகிறார். அப்போது, டங்ஸ்டன் சுரங்க திட்டம் கைவிடப்பட்டதை முறைப்படி அறிவிப்பார். இல்லாவிட்டால், போராட்டக் குழுவில் உள்ள 5 பேரை டெல்லி அழைத்துச் சென்று, மத்திய அமைச்சரை நேரில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்படும். மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு, பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.
டங்ஸ்டன் சுரங்கம் காரணமாக மேலூர் பகுதியில் 4,979 ஏக்கர் பரப்பில் சொத்து வாங்கவோ, விற்கவோ வில்லங்கச் சான்றிதழ் வழங்குவது ‘லாக்’ செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை. பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.