புலிக்குத்தி சேது பாஸ்கரா விவசாயக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிஎஸ்சி அக்ரி படித்துவந்த திருநெல்வேலி மாவட்டம் வீரமாணிக்கபுரம் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த மாணவி பிரித்திதேவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் முறையான விசாரணை நடத்த வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று ஜான்பாண்டியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள புலிக்குத்தி சேது பாஸ்கரா விவசாயக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிஎஸ்சி அக்ரி படித்துவந்த திருநெல்வேலி மாவட்டம் வீரமாணிக்கபுரம் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த மாணவி பிரித்திதேவி இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. மறைந்த மாணவி பிரித்திதேவிக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் கூறும் நிலையில் அதன் உண்மை தன்மையை விளக்க வேண்டுமென தமிழக காவல் துறை மற்றும் தமிழக முதல்வர் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
அக்கல்லூரி நிர்வாகம் மாணவியின் பெற்றோரிடம் முறையான பதில் அளிக்காமல் தங்கள் பணபலம் மற்றும் அதிகாரப் பலத்தை பயன்படுத்தி காவல் துறையினரின் உதவியுடன் இந்த மரணத்தை விபத்தாக மாற்ற முயற்சிக்கிறார்கள் என தகவல்கள் வருகின்றன..
எனவே மாணவியின் உடலை தகுந்த மருத்துவப் பரிசோதணைக்கு உட்படுத்துவதுடன் தகுந்த விசாரனை மேற்கொண்டு காவல் துறையினர் இறப்புக்கான உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும். இல்லையெனில் மாணவியின் மர்மமான சாவுக்கு நீதிகேட்டு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தும் சூழல் வரும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும், மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும். நீதி கிடைக்கும் வரை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் துணை நிற்கும்; மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் முறையான விசாரணை நடத்த வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.