விஜய் மத்திய அரசை கேள்வி கேட்பதுதான் முறை: திருமாவளவன்!

நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தடையாக இருப்பது மத்திய அரசு தான் என்பதை விஜய் உணர்ந்துள்ளாரா? என விசிக திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசை விமர்சித்து இன்று பதிவிட்டார். விஜய் வெளியிட்ட பதிவில், “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.. என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது. கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

தவெக தலைவர் விஜய்யின் இந்தப் பதிவு விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது. கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது. ஆனால், தான்தோன்றித்தனமாகவே இதுபோன்ற நிலைப்பாடுகளை எடுத்து மாநில அரசுகளை புறந்தள்ளி வருகிறது. தேர்தல் நேரத்தில் நீட் தேர்வை அகற்ற நடவடிக்கை எடுப்போம் என்றார்கள். சொன்னபடி, சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி அனுப்பியும் மத்திய அரசு அதனை ஏற்கவில்லை. நீட் தேர்வு ரத்து முயற்சியில் திமுக தன் கடமையை செய்துள்ளது. நீட் தேர்வு ரத்துக்கு தடையாக இருப்பது மத்திய அரசு தான் என்பதை தவெக தலைவர் விஜய் உணர்ந்துள்ளாரா எனத் தெரியவில்லை. மத்திய அரசை கேள்வி கேட்பதுதான் முறை. இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.