முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வராக பட்னாவிஸ் பதவியேற்பு!

மஹாராஷ்டிரா புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வராக பட்னாவிஸ் பொறுப்பேற்றார்.

மஹாராஷ்டிராவில், 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில் தேசியவாத காங்., காங்., ஆகிய கட்சிகளுடன் சிவசேனா, கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார். இந்நிலையில், சிவசேனாவின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ஏக்னாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கெடி தூக்கினர். இவர்களை சமரசப்படுத்த முதல்வர் உத்தவ் தாக்கரே மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தழுவியது. இதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய முதல்வர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்.

இந்நிலையில் முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான தேவேந்திர பட்னவிஸ், கவர்னர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்து, உடனடியாக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறும், கடிதம் அளித்தார். இதையடுத்து, இன்றைய தினம் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா தொடர்ந்த வழக்கில், ஓட்டெடுப்பு நடத்த அனுமதி அளித்து நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பை ஏற்ற உத்தவ் முதல்வர் பதவியை நேற்று இரவே ராஜினாமா செய்து கவர்னரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ.,க்கள் , பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தனர். அதன்படி, தங்கள் தரப்பு ஆதரவு கடிதத்துடன் ஏக்நாத் ஷிண்டே, முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் இருவரும் கவர்னரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக் கோரினர். ஏக்நாத் ஷிண்டேயை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தார். இதையடுத்து முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திரா பட்னாவிஸ் ஆகியோர் பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.