எந்தவொரு தடை வந்தாலும் அதை தாண்டி வருவேன்: விஷால்!

“அனைவருடைய அன்புக்கு நன்றி, எந்தவொரு தடை வந்தாலும் அதை தாண்டி வருவேன்” என்று விஷால் கூறியுள்ளார்.

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மதகஜராஜா’ திரைப்படம் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து பிரச்சினைகளையும் கடந்து வெளியாகியுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் விஷால் பேசியதாவது:-

எத்தனை பேர் நேசிக்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொண்டேன். இன்னும் பல மெசேஜ்களுக்கு பதிலளிக்காமல் உள்ளது. சீக்கிரம் குணமாகி வாருங்கள் என்று சொன்னார்கள். இது சாதாரண வைரல் காய்ச்சல் தான், குணமாகிவிட்டது. அன்றைக்கு கொஞ்சம் அதிகமாக இருந்தது. அந்தச் சந்திப்புக்கு போக வேண்டாம் என்று அப்பா – அம்மா சொன்னார்கள். உடல்நிலை அவ்வளவு மோசமாக இருந்தது. கண்ணாடியில் பார்க்கும்போது எனக்கு சுந்தர்.சி சாருடைய முகமும், ‘மதகஜராஜா’ லோகோவும் தான் தெரிந்தது. அதனால் தான் வந்தேன்.

அனைவருடைய அன்புக்கு கடமைப்பட்டிருக்கிறேன். இப்படியொரு அன்பை எதிர்பார்க்கவில்லை. அந்நிகழ்ச்சிக்குப் பிறகு பலரும் தொலைபேசி வாயிலாக விசாரித்தார்கள். எந்தவொரு மருத்துவமனையில் நான் அட்மிட் ஆகவில்லை. உடல்நிலை சரியாகிவிட்டது.

எனது அப்பாவின் தன்னம்பிக்கை தான் எனது பலம். எந்தவொரு தடை வந்தாலும் அதை தாண்டி வருவேன். நிறைய பேர் 3 மாதம், 6 மாதம் படப்பிடிப்புக்கு வரமாட்டார் என்று சொன்னார்கள். இப்போது மைக்கை சரியாக தானே பிடித்திருக்கிறேன். அனைத்தும் சரியாகிவிட்டது. அனைவருக்கும் ‘மதகஜராஜா’ பிடித்திருக்கும் என நம்புகிறேன். அனைவருடைய அன்புக்கு நன்றி. இந்த அன்புவை சாகும் வரைக்கும் மறக்கவே மாட்டேன். இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.