பெரியாரை விமர்சிப்பவர்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கு: சத்யராஜ்!

அரசியல் செய்ய வேண்டும் என்று பெரியாரை அவதூறாக பேசும் நண்பர்களை கண்டு பரிதாபமாக இருப்பதாக நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தின. இதனைத் தொடர்ந்து சீமானுக்கு அரசியல் கட்சியினர், பெரியாரிய அமைப்புகள் என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பெரியாரை விமர்சிப்பதை சீமான் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று ஏராளமானோர் கூறியுள்ளனர். சீமானின் கருத்து சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதாக இருப்பதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 70க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகி இருக்கும் நிலையில், அவர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் சீமானின் கருத்துக்கு நடிகர் சத்யராஜ் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் கூறியுள்ளதாவது:-

தந்தை பெரியாருடைய திராவிட கருத்தியலின் அடிநாதமான சமூகநீதி கோட்பாட்டை பொது மேடைகளில் சொல்லி உண்மையான விளக்கத்தை கூறி, நாங்கள் வந்தால் இதையெல்லாம் மாற்றி காட்டுவோம் என்று பேசுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஏதோ அரசியல் செய்ய வேண்டும் என்று புதிதாக பேசுபவர்களை பார்த்து கோபம் கூட வரவில்லை. பரிதாபமாக இருக்கு.. 100 ஆண்டுகளுக்கு மேலாக பேசுகிறார்கள். ஒரே ஆள் பேச முடியாது என்பதால் புது முகங்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அந்த முது முகங்களை பார்த்து பரிதாபம் தான் படமுடியும்.

சமூகநீதி கோட்பாட்டையும், திராவிட கருத்தியலையும் பெரும்பாலான கட்சிகள் ஏற்றுக் கொண்டுவிட்டன. காங்கிரஸ், கம்யூனிட்ஸ்ட் போன்ற கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. ராகுல் காந்தி நாடாளுமன்றத்திலேயே பேசி இருக்கிறார். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பெரியாருக்கு மிகப்பெரிய விழாவை மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தி இருக்கிறார். திராவிடம் என்ற பெயரை கட்சியின் பெயரிலேயே வைத்திருப்பவர்கள் பெரியாரை ஆதரிப்பாளர்கள். திக, திமுக, மதிமுக, தபெதிக, திராவிட விடுதலை கழகம், அதிமுக, தேமுதிக என்று இத்தனை கட்சிகளின் பெயர்களிலேயே திராவிடம் உள்ளது. இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தங்களின் கொள்கை வழிகாட்டி பெரியார் என்று கூறியிருக்கிறார். விசிக தலைவர் திருமாவளவன் மிகச்சிறந்த கண்டன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திராவிட கருத்தியலை ஏற்றுக் கொண்டு செயல்படுகிறார். தம்பி விஜய் தவெகவின் கொள்கை தலைவராக பிரகடனபடுத்தி இருக்கிறார். இவ்வளவு பேர் பெரியாரை ஏற்ற பின் திராவிட கருத்தியலுக்கு எதிராக பேசுபவர்களை பார்த்தால், அவர்கள் மீது பரிதாபம் தான் வருகிறது. புலம்பும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.