மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் விழா நாளில் தேர்வுகள் நடத்தக் கூடாது என மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்பி கூறியுள்ளதாவது:-
சென்னை, மதுரை, திருச்சி பள்ளிகளில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஜனவரி 13, 16, 17, 18 தேதிகளில் 6 ஆம் முதல் 11 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொங்கல் அறுவடைத் திருநாள் மட்டுமல்ல, தமிழ் மக்களின் பண்பாட்டுடன் இணைந்தது. தமிழ்நாடு அரசு ஜனவரி 14 முதல் 18 வரை விடுமுறை அறிவித்துள்ளது. கேந்திரிய வித்யாலயா குழந்தைகள் மட்டும் பொங்கல் விடுமுறையின் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாமல் போய் விடக் கூடாது. இது மாணவர்களை உளவியல் ரீதியாக பாதிக்க கூடும். ஆகவே தேர்வுத் தேதிகளை மாற்றி பொங்கல் விடுமுறைக்கு பின்னர் நடத்துமாறு வலியுறுத்தி கேந்திரிய வித்யாலயா மண்டல துணை ஆணையாளர் திரு டி மணிவண்ணன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி கூறியுள்ளார்.