நீட் முதல் மின் கணக்கெடுப்பு வரை “செயல்” எங்கே?: தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி!

நீட் முதல் மின் கணக்கெடுப்பு வரை சொல் உள்ளது “செயல்” எங்கே? என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின், தனது ஆட்சியில் அனைத்தும் சொல்லாக மட்டுமின்றி செயலாக மாறுகிறது என்று கூறி இருந்தார். இதற்கு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனத்தை முன்வைத்து கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-

எனது ஸ்டைல் “சொல்” அல்ல “செயல்”.. என்கிறார் தமிழக முதல்வர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்..

நீட் தேர்வை ஒழிப்பேன் என்பது உங்கள் “சொல்”
“செயல்” எங்கே?..

மதுக்கடைகளை ஒழிப்பேன் என்பது உங்கள் “சொல்”
“செயல்” எங்கே?..

பொங்கல் பரிசு தருவேன் இது உங்கள் “சொல்”
“செயல்” எங்கே?…

பழைய ஓய்வூதியம் என்பது உங்கள் “சொல்”
“செயல்” எங்கே?…

ஒவ்வொரு மாதமும் மின் கணக்கெடுப்பு.. என்பது உங்கள் “சொல்”
“செயல்” எங்கே?..

வேங்கைவயல் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் இது உங்கள் “சொல்”
“செயல்” எங்கே?..

தமிழ்நாட்டில் எங்கே அந்த சார்?.. என்று கேட்பதைப் போல்.. எங்கே அந்த.. “செயல்?”… என்று தான் கேட்க வேண்டும். முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே உங்கள் ஸ்டைல் “சொல்” அல்ல “செயல்” என்கிறீர்கள்.. நாங்கள் பார்த்த உங்கள் ஸ்டைல்.. உங்கள் “சொல்” எல்லாம் “செயல்” அல்ல என்பதுதான்..

உங்கள் ஸ்டைல்.. வெறும் வாய்ச்சொல் மட்டுமல்ல.. அது பொய் “சொல்லே” என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.

இதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலை பாஜக புறக்கணிப்பு செய்தது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் போட்ட பதிவில், “அனைத்து முக்கிய கட்சிகளும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது என்பது செய்தி.. புறக்கணிக்கப்படுவது தேர்தல் அல்ல.. உண்மையில் புறக்கணிக்கப்படுவது திமுக தான்.

யாரும் நம்பிக்கையோடு.. போட்டி போடக்கூட தகுதியற்றது திமுக. என்பதை அனைத்துக் கட்சிகளின் முடிவும் காண்பிக்கிறது. திமுகவின் அராஜக அரசியலால் நேர்மையாக தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கை இன்மையால் தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுக்கும் கட்டாயத்தை ஏற்படுத்தும் திமுகவை 2026- இல் மக்கள் புறக்கணிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.