மீண்டும் இணையும் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணி!

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் ஒரு படம் வெளியானால் அந்தப் படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறிவிடுகின்றது. இயக்குநர் வெற்றி மாறனின் முதல் இரண்டு படங்களிலும் கதாநாயகனாக நடித்தது, தனுஷ் தான். இவர்கள் இருவரும் இணைந்து விட்டாலே, அந்தப் படத்தின் தரம் குறித்து ரசிகர்களுக்கு சந்தேகமே எழுவதில்லை. கடைசியாக இவர்கள் கூட்டணியில் வெளியான அசுரன் படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறியது. இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணையவுள்ளனர். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றி மாறன், மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இவரது முதல் படம் பொல்லாதவன். இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து பணிபுரிந்தார் வெற்றி மாறன். இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக மாறியது. அதன் பின்னர் இவர்கள் கூட்டணியில் உடனே, உருவான அடுத்த படம் ஆடுகளம். இந்தப் படம் முழுக்க முழுக்க சேவல் சண்டையை மையப்படுத்தி இருந்ததால், தமிழ் சினிமாவிற்கே இந்தப் படம் புதிய அனுபவத்தைக் கொடுத்தது. ஆடுகளம் படமும் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்திற்காக பல தேசிய விருதுகள் படக்குழுவினருக்கு கிடைத்தது.

அதன் பின்னர், வெற்றி மாறன் நடிகர் தினேஷ் உடன் இணைந்து விசாரணை படத்தினை இயக்கினார். இந்தப் படம் லாக் அப் என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். படத்தின் காட்சிகள், திரைக்கதை, படத்தில் நடித்த நடிகர் தினேஷின் அற்பணிப்பு என படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறியது. இந்தப் படத்திற்குப் பின்னர் மீண்டும் இணைந்தனர் தனுஷ், வெற்றி மாறன். இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக வெளியான படம்தான் வட சென்னை. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்கச் சொல்லி ரசிகர்கள் தனுஷ்க்கும் வெற்றி மாறனுக்கும் தொடர் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

வடசென்னை படத்திற்குப் பின்னர் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து அசுரன் என்ற மாபெரும் வெற்றிப் படத்தினைக் கொடுத்தார்கள். இந்தப் படமும் வெற்றி மாறனின் வெற்றிகளோடு இணைந்தது. வெற்றி மாறன் தனது படத்தில் தொடர்ந்து அரசியல் நிலைப்பாடுகளை எடுத்துக் காட்டி வருகின்றார். அசுரன் படத்திற்கு பின்னர் வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை பாகம் 1 மற்றும் விடுதலை பாகம் 2 படங்கள் ரிலீஸ் ஆகி பெரும் வெற்றிப் படங்களாக மாறியது.

இந்நிலையில் வெற்றி மாறன் மற்றும் தனுஷ் மீண்டும் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படம் இவர்கள் கூட்டணியில் உருவாகும் 5வது படம். மேலும் இது வெற்றி மாறனின் 9வது படம் ஆகும். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வட சென்னை படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டு இருந்த நிலையில் இது அந்தப் படமா என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மொத்தத்தில் இந்த தகவல் வெற்றி மாறன் மற்றும் தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படத்தினை ஆர்.எஸ். எண்டர்டைமெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. வெற்றி மாறன் தனது 8வது படமான வாடி வாசல் படத்தினை அடுத்து இயக்கவுள்ளார்.