முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!

அ​திமுக முன்​னாள் அமைச்சர் வைத்​திலிங்​கத்​தின் ரூ.100 கோடிமதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளது.

தமிழகத்​தில் கடந்த 2011 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்​தில் தமிழக வீட்டு​வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்​சித்துறை அமைச்​சராக இருந்​தவர் வைத்​திலிங்​கம். முன்​னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்​வத்​தின் ஆதரவாளராக உள்ளார். தற்போது ஒரத்​தநாடு தொகுதி எம்எல்​ஏவாக​வும் உள்ளார். இவர், வீட்டு​வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்​சித்துறை அமைச்​சராக இருந்த கால கட்டமான 2013-ம் ஆண்டு, பிரபல தனியார் நிறு​வனம் சென்னையை அடுத்​துள்ள பெருங்​களத்​தூரில் 57.94 ஏக்கர் நிலத்​தில் 1,453 வீடுகள் கொண்ட அடுக்​கு​மாடி குடி​யிருப்​பைக் கட்ட அனுமதி கோரியது.

இதற்காக அந்த நிறு​வனம் சென்னை பெருநகர வளர்ச்சி குழு​மத்​தில் விண்​ணப்​பித்து இருந்​தது. 2013-ல், இந்த நிறு​வனம் விண்​ணப்​பித்த போதி​லும் சுமார் 3 ஆண்டுகள் அத்திட்​டத்​துக்கு அனுமதி கிடைக்க​வில்லை. இந்த சூழலில் 2016-ம் ஆண்டு திடீரென அத்திட்​டத்​துக்கு அனுமதி கிடைத்​தது. இந்த அனும​தியை வழங்க அப்போதைய வீட்டு​வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்​சித்துறை அமைச்சர் வைத்​தி​லிங்​கத்​துக்கு மிகப் பெரிய தொகை லஞ்சமாக தரப்​பட்​டதாக குற்​றச்​சாட்டு எழுந்​தது.

இதுதொடர்பாக தமிழக காவல்​துறை​யின் லஞ்ச ஒழிப்பு துறை​யில் புகார் தெரிவிக்​கப்​பட்​டது. அதில் வைத்திலிங்​கத்​தின் மகன்கள் இயக்​குநர்​களாக உள்ள நிறு​வனத்​துக்​கு கடன்போல பல்வேறு நிறு​வனங்கள் மூலம் ரூ.27.9 கோடி தரப்​பட்​ட​தாக​வும் அந்த நிறு​வனம் திடீரென கடனை திருப்பி தரமுடிய​வில்லை என்று நோட்​டீஸ் அனுப்​பி​விட்​ட​தாக​வும் கூறப்​பட்​டுள்​ளது. இந்த லஞ்ச பணத்​தை பயன்​படுத்தி வைத்​திலிங்​க​மும், அவரது மகன்​களும் திருச்சி பாப்​பாகுறிச்​சி​யில் ரூ.24 கோடி மதிப்புள்ள 4.5 ஏக்கர் நிலத்தை வாங்​கிய​தாக கூறப்​பட்டு இருந்​தது.

இந்த புகாரின் அடிப்​படை​யில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்​தி​யது. அதில், வைத்​திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் மீது அளிக்​கப்​பட்ட புகாரில் உண்மை இருப்பது உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்து முன்​னாள் அமைச்சர் வைத்​திலிங்​கம், சம்பந்​தப்​பட்ட தனியார் நிறுவன இயக்​குநர் மற்றும் வைத்​திலிங்​கத்​தின் மகன்கள் பிரபு, சண்முக பிரபு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்​துறை வழக்​குப்​ப​திவு செய்​தது. குறிப்பாக 2011 – 2016 வரையிலான அதிமுக ஆட்சி​யில் வருமானத்​துக்கு அதிகமாக வைத்​திலிங்கம் ரூ.33 கோடி சொத்து சேர்த்​ததாக எழுந்த புகாரின் அடிப்​படை​யில் லஞ்ச ஒழிப்புத்​துறை இந்த வழக்கை பதிவு செய்திருந்​தது.

இதுஒரு​புறம் இருக்க, சட்ட விரோத பணப் பரிமாற்றம் பிரி​வின் கீழ் அமலாக்​கத்​துறை​யும் தனியாக வழக்​குப் பதிவு செய்து விசாரணை மேற்​கொண்​டது. அதுமட்டும் அல்லாமல் வைத்​திலிங்கம் தொடர்​புடைய பல்வேறு இடங்​களில் சோதனை நடத்தி பல ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்​கொண்​டது.

இந்நிலை​யில், வைத்​திலிங்​கத்​துக்கு சொந்​தமான ரூ.100 கோடியே 92 லட்சம் மதிப்புள்ள 2 அசையா சொத்துகளை முடக்கி​யுள்ளதாக அமலாக்​கத்​துறை தெரி​வித்​துள்ளது. வீட்டு வச​தித்​துறை அமைச்​சராக இருந்த​போது வரு​மானத்​துக்கு அதிகமாக சொத்து சேர்த்​ததாக ப​திவான வழக்​கின் அடிப்​படை​யில் இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்ளதாக அமலாக்​கத்​துறை தெரி​வித்​துள்​ளது.