ரெயில்வே அமைச்சகமும், மந்திரியும் இனியாவது உண்மையை பேச முன் வர வேண்டும்: சு.வெங்கடேசன்!

ரெயில்வே அமைச்சகமும், மந்திரியும் இனியாவது உண்மையை பேச முன் வர வேண்டும். மதுரை – தூத்துக்குடி திட்டத்திற்கான நிதியை வரும் பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளதாவது:-

மதுரை – தூத்துக்குடி திட்டம் பற்றி செய்தியாளர் கேள்வி, மந்திரியின் காதில் சரியாக விழவில்லை என ரெயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மந்திரியின் அபத்தமான பதிலை கண்டித்து எல்லோரும் சொன்ன கருத்துகள் ரெயில்வே நிர்வாகத்தின் காதில் விழ ஏன் ஐந்து நாட்கள் ஆனது..?

“தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு துரோகமும், தமிழ்நாட்டின் செய்தியாளர்கள் மீது பழியும்” சுமத்தும் இரட்டை வழி அணுகுமுறையை ரெயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.

தனது மற்றொரு பதிவில் கூறியிருப்பதாவது:-

ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டியில் மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி புதிய பாதை திட்டத்திற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்ததால், அதை கைவிடக் கூறியதால் அது கைவிடப்பட்டது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். கடந்த இடைக்கால பட்ஜெட்டில் 100 கோடியும் வழக்கமான பட்ஜெட்டில் 18 கோடியும் ஒதுக்கி இருப்பதை நான் ஏற்கனவே சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளேன். அதற்கு முழு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரியுள்ளேன்.

இப்போது அந்தத் திட்டமே கைவிடப்பட்டது என்று அவர் அறிவித்தது அதிர்ச்சியை அளித்தது. அதுவும் தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க அது கைவிடப்பட்டதாக அவர் அறிவித்தார். இதற்கு தமிழக அரசு பதிலளிக்கட்டும் என்று காத்திருந்தேன். தமிழக அமைச்சரும் இந்த திட்டத்தை கைவிடச் சொல்லி தாங்கள் கூறவில்லை என்றும் ரெயில்வே மந்திரி கூறுவது பொய் என்றும் விளக்கி உள்ளார். தாங்கள் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என்று தான் கோரியிருந்தோம் என்று விளக்கி இருந்தார்.

இப்போது ரெயில்வே மந்திரி, “தமிழக அரசு கைவிட கோரியது தனுஷ்கோடி திட்டத்தை தான் என்றும் செய்தியாளர்களுடைய சத்தங்களால் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தனுஷ்கோடி திட்டம் தான் கேட்கிறார்கள் என்று நினைத்து தமிழக அரசு கைவிடக் கூறியதாக கூறிவிட்டதாகவும் உண்மையில் தூத்துக்குடி திட்டம் கைவிடப்படவில்லை என்றும் அதற்கு நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை இல்லை என்றும் இப்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியது அனைத்து ஊடகங்களிலும் ஒரே மாதிரியாக வந்துள்ள போது, சத்தத்தால் குழப்பம் ஏற்பட்டதாக மந்திரி சொல்வது ஏற்கக் கூடியதாக இல்லை.

செய்தியாளர் சந்திப்பின் காணொலியும் மிகத்தெளிவாகவே உள்ளது. மந்திரி வேண்டுமென்றே தமிழக அரசின் மீது பழிபோடவே அவ்வாறு கூறினார் என்று எண்ணத் தோன்றுகிறது. உண்மை அப்படி இருக்கும் பட்சத்தில் ஊடகங்களில் வந்த செய்தியை உடனடியாக ஏன் மறுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. எல்லா விமர்சனங்களுக்குப் பிறகு ஐந்து நாட்களுக்குப் பின் இப்போது தான் ரெயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

இப்படித்தான் அவர்கள் நாடாளுமன்றத்தில் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு திசை திருப்பும் பதில் அளிக்கிறார்கள். மழைக்கால கூட்டத்தொடரில் ரெயில்வே மந்திரி, அவையில் பேசிய ஆவேச பேச்சு மோசமான பதிலுக்கு நல்லதொரு உதாரணம். அதே போன்ற தொனியில் தான் தமிழ்நாடு அரசின் மீது பழி கூறிய மந்திரியின் பேச்சும்.

புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமானம் 30 சதம் பலமற்று இருக்கிறது என ரெயில்வே பாதுகாப்பு அமைப்பு குற்றம் சாட்டிய போது வாய்திறக்காத பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மந்திரியின் பொய்யான தகவலை நம்பி வேகவேகமாக போராட்டத்தை அறிவித்துள்ளார். அவரை தொடர்ந்து அ.தி.மு.க.வும் போராட்டத்தை அறிவித்தது. உண்மையில் மத்திய அரசு ரெயில்வே துறையில் தமிழ்நாட்டை தொடர்ந்து எப்படி புறக்கணித்து வருகிறது என்பதை பற்றி அடிப்படை புரிதல் இருக்கும் யாரும் மந்திரியின் பேச்சு எவ்வளவு அபத்தம் என்பதை ஆராயாமலே புரிந்து கொள்ள முடியும்.

ரெயில்வே அமைச்சகமும், ரெயில்வே மந்திரியும் மக்கள் மத்தியில் உண்மையைப் பேச இனியாவது முன் வர வேண்டும். அந்த அளவு முயற்சிப்பது கடினம் என்றால் குறைந்த பட்சமாக மதுரை – தூத்துக்குடி திட்டத்திற்கான நிதியையாவது வரும் பட்ஜெட்டில் போதுமான அளவு ஒதுக்கி நியாயம் வழங்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.