தப்ப முயன்ற ரௌடி பாம் சரவணனை சுட்டுப்பிடித்த காவல்துறை!

காவல் உதவி ஆய்வாளர் மீது கத்தியால் குத்தி தப்ப முயன்ற ரௌடி பாம் சரவணனை காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர்.

பகுஜன் சமாஜ் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரௌடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்கு பிறகு தலைமறைவாக இருந்து வந்தார். இதனால், அவரை காவல்துறை பல்வேறு வழக்குகளில் தேடி வந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க பாம் சரவணன் திட்டமிடலாம் என உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வரதப்பாளையம் பகுதியில் தலைமறைவாக இருந்த பாம் சரவணனை நேற்று இரவு கைது செய்த தனிப்படை போலீஸார் சென்னைக்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர். நேற்று நள்ளிரவு விசாரணை செய்த பின்னர் சென்னை எம்கேபி நகரில் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது, அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டை வீசி தப்ப முயன்று, பிடிக்க சென்ற எஸ்ஐ மீது சரவணன் கத்தியால் தாக்கியதாகவும், இதனால், அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

பாம் சரவணனிடம் இருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள், ஒரு பட்டாக்கத்தி மற்றும் 5 கஞ்சா பண்டல்களை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர்.