முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு புதிய மேற்பார்வை குழு அமைக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை மேற்பார்வை செய்ய 7 பேர் கொண்ட புதிய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. அணைப் பாதுகாப்பு சட்டத்தின்படி, புதிய மேற்பார்வை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த புதிய குழுவில் தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் தமிழ்நாடு நீர்வளத்துறையின் கூடுதல் செயலாளர், கேரள நீர்வளத்துறை கூடுதல் செயலாளர், காவிரி தொழில்நுட்பக்குழுவின் தலைவர், கேரள நீர்பாசனத்துறை தலைமைப் பொறியாளர், பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் அணைகளுக்கான சர்வதேச சிறப்பு மையத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி, தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக மத்திய நீர்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு தொடர்பாக ஏற்கனவே இருந்த 5 பேர் கொண்ட மேற்பார்வை குழுவை மத்திய அரசு கலைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு தொடர்பாக கேரளத்தைச் சேர்ந்த மேத்யூ நெடும்பாரா என்பவர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது அணைப் பாதுகாப்பு – 2021 சட்டத்தின்படி முல்லைப் பெரியாறு அணைக்கு உரிய கண்காணிப்புக் குழு நியமிக்கப்படவில்லை என்று முறையிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் உரிய குழுவை விரைவில் அமைப்பதாக மத்திய அரசு உறுதியளித்திருந்தது. அதன்படி, அணை பாதுகாப்புக்கு குழு அமைத்து மத்திய அரசு உத்தர பிறப்பித்து, அணைப் பாதுகாப்பு தொடர்பான பணிகளை கவனிக்கும் பொறுப்பு தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.