ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என ஈரோடு பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு எஸ்பி ஜவகர் மற்றும் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் அலுவலகத்தில், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ப.ரத்தினசாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் விளம்பரத்துக்காகவும் சுயலாபத்துக்காகவும் மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில், இனம் மொழி அடிப்படையில் பிரிவினைவாத கருத்துக்களை பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் போது, பட்டியலின சமூகத்தை இழிவுபடுத்தி பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பெரியார் மீது வேண்டுமென்றே வீண் அவதூறுகளை பொதுவெளியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பரப்பி உள்ளார்.
இதுகுறித்து தமிழகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரோட்டில் தேர்தல் பரப்புரை வாய்ப்பைப் பயன்படுத்தி மீண்டும், இனம்,சாதி,மொழி அடிப்படையில் பிரிவினைவாத கருத்துக்களை பேசி, கலவரத்தை தூண்டி விட மேற்படி சீமான் முயற்சிக்கிறார். அரசியலமைப்புச் சட்டப்படி இது மாபெரும் குற்றமாகும். எனவே, கலவரத்தை தூண்டும் வகையில் சீமான் தேர்தல் பரப்புரை செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.