முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்புக்காக புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் கேரள அதிகாரிகள் இடம்பெற்றதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் 25ம் தேதி தமிழக எல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
முல்லை பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்கப்பட்டு வந்த நிலையில் 1979-ம் ஆண்டு அணை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக கேரளாவில் வதந்தி பரவியது. இதனைத் தொடர்ந்து அணையின் உச்ச நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருமாநிலங்களுக்கும் அணை தொடர்பான சர்ச்சை தொடங்கியது. 2011-ம் ஆண்டு தமிழக எல்லையில் பெரும் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரு மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தை நாடின. 2014-ம் ஆண்டு விசாரணை முடிவில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும், பேபி அணையைப் பலப்படுத்திய பிறகு 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதுவரை முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்கவும், பராமரிக்கவும் மத்திய கண்காணிப்பு மற்றும் துணை குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
இந்நிலையில் கடந்த நவம்பரில் முல்லைப் பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 21-ல் கண்காணிப்பு மற்றும் துணை கண்காணிப்பு குழுவும் கலைக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய நீர்வள ஆணையம் 7 பேர் கொண்ட புதிய மேற்பார்வைக் குழுவை நியமித்துள்ளது. இதன் தலைவராக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின், தமிழக பிரதிநிதிகளாக தமிழக நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதேபோல் கேரள நீர்வளத் துறையைச் சேர்ந்த இருவரும் இதில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவின் தொழில்நுட்ப உதவிக்காக பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் அணைகள் ஆய்வு அதிகாரியும், புதுடெல்லியைச் சேர்ந்த தேசிய பேரிடர் மேலாண்மை குழு அதிகாரி என மொத்தம் 7 பேர் இதில் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவில் கேரள அதிகாரிகள் இடம்பெற்றதற்கு தமிழக விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுவிக் பாலசிங்கம் கூறியதாவது:-
பெரியாறு அணை குறித்து கேரளாவில் தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த அணை தமிழகத்தின் குத்தகையின் கீழ் இருந்து வருகிறது. இந்நிலையில் புதிய குழுவில் கேரளாவைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இருப்பதால் சிறிய பராமரிப்புப் பணிக்கு கூட அவர்களை கெஞ்ச வேண்டிய நிலை ஏற்படும். நீர்மட்டத்தை மேலும் குறைக்க உத்தரவிடும் நிலைகூட உருவாகலாம். எனவே கேரள அதிகாரிகளை இக்குழுவில் இருந்து நீக்க வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் 25ம் தேதி தமிழக எல்லையில் பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.