“அதானி குழுமத்துக்கு ஹின்டன்பர்க் அறிக்கையால் ஏற்பட்ட இழப்பை சரிகட்டுவதற்கு மோடி அரசு அனைத்து வகைகளிலும் உதவி செய்து வருகிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடியின் ஆட்சியைப் பொறுத்தவரை எழை, எளியவர்களுக்கு பயனளிப்பதை விட சில குறிப்பிட்ட தொழிலதிபர்கள் சொத்து குவிக்கவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதானி, அம்பானி உள்ளிட்டவர்களின் சொத்து பலமடங்கு குவிந்திருக்கிறது. ஹின்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 2023-ல் அதானி குழும முறைகேடுகளை அம்பலப்படுத்தி, அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் கடும் வீழச்சியடைந்தன. இதனால் ரூபாய் 12 லட்சம் கோடியை இழந்த அதானி, உலக பணக்காரர்கள் பட்டியலில் நான்காவது இடத்திலிருந்து ஒரே இரவில் இருபதாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதானி குழுமம் இந்திய முதலீட்டாளர்களை மோசடி செய்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின.
அதானி முறைகேடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் விசாரிக்க ஆணையிட்டது. ஆனால், செபி முறையான விசாரணை நடத்தாமல் காலம் தாழ்த்தியது. இதைத் தொடர்ந்து தேச நலன்களுக்கு எதிராக விமான நிலையங்கள், துறைமுகங்கள், பாதுகாப்புத்துறை, மின்சாரம் மற்றும் சிமெண்ட் உற்பத்தி, நெடுஞ்சாலைத்துறைகளில் அதானியின் தொழில் பலமடங்கு விரிவுபடுத்தப்பட்டது. இதற்கு பிரதமர் மோடியின் ஆதரவு தான் காரணமாகும்.
அமெரிக்க நீதித்துறை சூரியஒளி மின் திட்டங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதானி குழுமத்தின் மீது ஆதாரத்துடன் குற்றம் சாட்டியது. இதன் காரணமாக பல நாடுகளில் அதானியின் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளின் ஆதாரத்தின் அடிப்படையில் அதானி செய்து கொண்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன. இத்தகைய அதானியின் முறைகேடுகளை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டுமென்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விடுத்த கோரிக்கையை மோடி அரசு நிராகரித்தது. மோடியின் மடியில் கனம் இருப்பதால் இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
ஹின்டன்பர்க் அறிக்கையால் வீழ்ச்சியடைந்த அதானி குழுமம் மேலும் மேலும் சொத்துகளை குவிக்க மத்திய பாஜக அரசின் பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்களை பெறுவதற்கு மோடி அரசு வாய்ப்பளித்திருக்கிறது. மத்திய அரசின் கீழ் இயங்கும் பல துறைகள் மேம்பாடு மற்றும் கடன்சுமை காரணங்களுக்காக தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசின் கீழ் இயங்கும் பல துறைகள் தனியார் வசம் ஒப்பந்த முறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரியதாக விளங்கும் இந்திய ரயில்வே துறையின் சில பகுதிகள் மேம்பாடு மற்றும் கடன் செலுத்துவதற்காக தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, விமான நிலையங்கள், துறைமுகங்கள் தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. தற்போது, முதன்முறையாக இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழகத்தின் திருச்சி – துவரங்குறிச்சி – மதுரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை தனியார் வசம் ஒப்பந்த அடிப்படையில் மேம்பாடு மற்றும் அரசின் வருமான உயர்வுக்காக வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அதானி சாலை போக்குவரத்து குழுமம் ரூபாய் 1692 கோடிக்கு இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
124 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை தனியார்மய திட்டத்தின் மூலம் அதானி குழுமத்துக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாகும். தமிழகத்தில் அதானி குழுமம் நுழைவதற்கு வாய்ப்பில்லாத நிலையில் மத்திய நெடுஞ்சாலைத்துறை இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இத்தகைய திட்டங்களை அதானி குழுமத்துக்கு வழங்குவதன் மூலம் ஹின்டன்பர்க் அறிக்கையால் ஏற்பட்ட இழப்பை சரிகட்டுவதற்கு மோடி அரசு அனைத்து வகைகளிலும் உதவி செய்து வருகிறது.
மோடி அரசின் அதானி ஆதரவு அணுகுமுறையின் காரணமாக கடந்த ஜனவரி 15-ம் தேதி ஒரே நாளில் 7.47 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகள் உயர்வு பெற்று ஆதாயம் அடைந்துள்ளன. இத்தகைய பங்கு பரிவர்த்தனையினால் ஏற்பட்ட லாபத்தின் மூலம் அதானி குழும பங்குகளுக்கு ஏற்பட்ட உயர்வினால் உலகத்தில் உள்ள 20 கோடீஸ்வரர்களில் 73.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உயர்ந்துள்ளதாக ப்ளும் பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக அதானியை உயர்த்துவதினால் பிரதமர் மோடியும், பாஜக-வும் அடைந்த ஆதாயம் என்ன? பயன் என்ன? ஒரு குறிப்பிட்ட தொழிலதிபர்களை மத்திய பாஜக அரசின் பாரபட்சமான அணுகுமுறையினால் கொள்ளை லாபம் சம்பாதிக்க அனுமதிப்பதன் மூலம் பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் உள்ள உறவு அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து பலமுறை எதிர்கட்சிகள் ஆதாரத்துடன் குற்றம்சாட்டியும் பிரதமர் மோடியால் அதானியை கைவிட முடியவில்லை. இதற்கு பின்னாலே இருக்கிற ரகசியத்தை தான் ஹின்டன்பர்க் உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் அம்பலப்படுத்தின.
எந்த குற்றச்சாட்டை எவர் கூறினாலும் அதானி மீது எந்த விசாரணைக்கும் உட்படுத்தாமல் மோடி அரசு பாதுகாத்து வருகிறது. தம்மை மனிதப் புனிதராக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பிரதமர் மோடி, அதானி சொத்து குவிப்பின் மூலம் பாஜக பெற்ற ஆதாயம் என்ன என்பதை நாட்டு மக்கள் அறிய விரும்புகிறார்கள். ஏற்கெனவே நெடுஞ்சாலைத்துறையில் 2023 டிசம்பரில் சிஏஜி அளித்த அறிக்கையில் 7 திட்டங்களை ஆய்வு செய்ததில் ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிக்கை அளித்திருந்தது.
ஆனால், இதுகுறித்து எந்த விசாரணையும் நடத்த மோடி அரசு தயாராக இல்லை. மோடியின் அதானி ஆதரவு நடவடிக்கை ஊழல் இல்லை என்றால் எது ஊழல் என்பதை பிரதமர் மோடியும், பாஜக-வும் தான் விளக்க வேண்டும். மோடி – அதானி கூட்டுக் கொள்ளைக்கு இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் அதற்குரிய விலையை பிரதமர் மோடியும், பாஜகவும் கொடுக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.