முதல்வர் ஸ்டாலின், உதயநிதிக்கு நன்றி சொன்ன நடிகர் அஜித்!

இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயத்தை சென்னையில் நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

துபாயில் நடைபெற்ற துபாய் 24H கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி 3வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின் கார் ரேஸில் கவனம் செலுத்தி வரும் அஜித் குமார், முதல் சுற்றிலேயே வெற்றியை சுவைத்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதேபோல் அஜித் குமார் ஓட்டுநராக களமிறங்கிய அணி வெற்றிபெறவில்லை என்றாலும், அவரது அணிக்கு ஸ்பிரிட் ஆஃப் தி மேன் விருது அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியக் கொடியுடன் அஜித் குமார் கொண்டாடிய சம்பவம் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள், நட்சத்திரங்கள், பிரபலங்கள் என்று அனைத்து தரப்பினரும் அஜித் குமாருக்கு வாழ்த்து கூறினர். இதற்கு அஜித் குமாரும் நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் தெற்கு ஐரோப்பிய சீரிஸ் 2025 கார் ரேஸ் தொடர் போர்ச்சுகலில் நடக்கவுள்ளது. இதற்கான பயிற்சியை அஜித் குமார் ரேஸிங் அணி தயாராகி வருகிறது. இதன் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. இந்த நிலையில் நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அஜித் குமார் அளித்த நேர்காணலில், சென்னையில் இரவு நேர கார் பந்தயத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தியது வரவேற்கத்தக்கது. இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயம் சென்னையில் தான் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் இந்தியாவின் கார் பந்தய விளையாட்டில் ஈடுபடுவோருக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது. அதேபோல் எனக்கு ஆதரவளித்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கும் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

துபாய் 24H கார் ரேஸின் போது அஜித் குமார் அணிந்திருந்த உடையில், தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முத்திரை இடம்பெற்றிருந்தது. அந்த முத்திரையை அஜித் குமார் வீடியோ ஒன்றில் பெருமையாக காட்டியதும் மக்களிடையே அதிகமாக பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.