கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் அதிரப்பள்ளி வனப்பகுதியில், உயிரிழந்த சில காட்டுப் பன்றிகளுக்கு, ‘ஆந்த்ராக்ஸ்’ வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இருப்பினும், பயப்படத் தேவையில்லை என, கேரள அரசு கூறியுள்ளது.
கேரளாவில், அதிரப்பள்ளி வனப்பகுதியில், ஆறு காட்டுப் பன்றிகள் உயிரிழந்து கிடந்தது, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பரிசோதனையில், அவற்றின் உடலில், ஆந்த்ராக்ஸ் வைரஸ் இருப்பது உறுதியானது.
இது தொடர்பாக, திருச்சூர் மாவட்ட கலெக்டர் ஹரிதா குமார், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின், ”இந்த வைரஸ், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. அதனால், பயப்படத் தேவையில்லை,” என்றார்.
”கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவது உட்பட, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதனால், பயப்படத் தேவையில்லை,” என, மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.