சூரி நடிக்கும் ‘மாமன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது!

‘கருடன்’, ‘விடுதலை 2’ படங்களுக்குப் பிறகு பிறகு சூரி நடித்து வரும் படம் ‘மாமன்’. இதன் படப்பிடிப்பு திருச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் நடைபெற்று வருகிறது. தாய்மாமனுக்கும், மருமகனுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டமே கதைக்களம் என்பதால் இப்படத்துக்கு ‘மாமன்’ எனப் பெயரிட்டுள்ளார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய பிறகு ’கொட்டுக்காளி’, ‘விடுதலை’, ‘கருடன்’ என தொடர்ந்து சீரியஸ் கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்த சூரி, இப்படத்தின் ஆக்‌ஷன் கலந்த கலகலப்பான கேரக்டரை தேர்வு செய்திருக்கிறார் என்பதை முதல் பார்வை போஸ்டர்களின் மூலம் யூகிக்க முடிகிறது. ஒரு போஸ்டரில் காமெடியை பிரதானமாகவும், இன்னொரு போஸ்டரில் ஆக்‌ஷனையும் மையக்கருத்தாக பயன்படுத்தி இருக்கிறது படக்குழு.

இப்படத்தில் சூரிக்கு நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். சூரியின் அக்காவாக முக்கிய கதாபாத்திரத்தில் ‘லப்பர் பந்து’ படம் மூலம் கவனம் ஈர்த்த ஸ்வாசிகா நடிக்கிறார். ‘கருடன்’ படத்தை தயாரித்த லார்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரித்து வருகிறது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படத்தையும் திருச்சியிலேயே பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ‘மாமன்’ படத்தை முடித்துவிட்டு, ‘செல்ஃபி’ இயக்குநர் மதிமாறன் இயக்கவுள்ள படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் சூரி.