கூட்டுறவுத்துறையில் மோசடி செய்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்: ஐ.பெரியசாமி

கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ரூ.750 கோடி மோசடி நடைபெற்றுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே கூட்டுறவு துறை சார்பாக கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்று மாணவ, மாணவியர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 5 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது; திமுகவின் ஒருவருட ஆட்சியில் 33 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.

தவறு நடக்காதவாறு வெளிப்படை தன்மையுடன் கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என கூறினார். கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் நடந்த ரூ.750 கோடி மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோசடி செய்தவர்களை விசாரணைக்குழு கண்டறிந்தபின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும். ஏலம் மூலம் கிடைக்கக் கூடிய தொகை அரசு கஜானாவில் சேர்க்கப்படும் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்திருக்கிறார்.