மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பட்டியலின சிறுவன் மீது சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன் பகை காரணமாக 17 வயது சிறுவனை கடத்தி செல்ஃபோனை பிடிங்கி கொண்டதோடு மட்டுமல்லாமல், 6 வயது சிறுவன் காலிலும் விழ வைத்து அவலம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தகவலின்படி தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில் உள்ள 345 கிராமங்கள் பட்டியலினத்தோருக்கு சாதிய வன்கொடுமைகள் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கேற்ப இரட்டை குவளை முறை தொடங்கி வேங்கைவயல் சம்பவம் வரை அடுத்தடுத்து சாதிய தீண்டாமைகள் நடந்து வருகின்றன. அதிலும் தென் மாவட்டங்களில் அதிகளவிலான சாதிய பாகுபாடு அதிகரித்துள்ளது. அதற்கேற்ப மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பட்டியலின சிறுவன் மீது சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சங்கம்பட்டி கிராமத்தில் பாதிக்கப்பட்ட பட்டியலின சிறுவன் வசித்து வருகிறார். கடந்த புரட்டாசி மாதம் நடந்த திருவிழாவின் போது, இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பிரிவினருக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் பொங்கல் பண்டிகையின் போது 17 வயதாகும் அந்த பட்டியலின சிறுவனை மற்ற சமூகத்தைச் சேர்ந்த 6 பேர் கடத்தி சென்றுள்ளனர். அதன்பின் ஊர் கண்மாய் அருகில் வைத்து சிறுவனின் செல்போனை பிடிங்கி கொண்டு, தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த சிறுவனை அனைவரின் காலிலும் விழ வைத்து கொடுமைபடுத்தியுள்ளனர். 17 வயதாகும் அந்த சிறுவனை, 6 வயது சிறுவன் ஒருவனின் காலில் விழ வைத்து துன்புறுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்த சிறுவன் மீது சிறுநீர் கழித்த அவலமும் நடந்துள்ளது. அதேபோல் அந்த சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, சாதிய ரீதியாக கொச்சையாக பேசியும் துன்புறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், அதே கிராமத்தைச் சேர்ந்த உக்கிர பாண்டியன், கிஷோர், மணிமுத்து, பிரேமா, சந்தோஷ் மற்றும் நித்தீஷ் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அந்த 6 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல் சிறுவனின் தந்தை புகார் அளித்து 3 நாட்கள் வரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும், விசிக நிர்வாகிகள் டிஎஸ்பி-யை சந்தித்து மனு கொடுத்த பின்னரே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.