“பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை சந்திப்பது விஜய்யின் விருப்பம்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் 2016 சட்டசபை தேர்தலின் போது நடந்த பொதுக்கூட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் கூடுதல் நேரம் பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் 12 பேர் மீது திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு திண்டுக்கல் ஜேஎம்-1 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக இன்று திங்கட்கிழமை வைகோ திண்டுக்கல் வருகை தந்தார். ஜேஎம் -1 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சவுமியா மேத்யூ முன்னிலையில் ஆஜரானார். விசாரணை நடத்திய நீதிபதி வழக்கு விசாரணையை பிப்ரவரி 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:-
2016-ம் ஆண்டு தேர்தல் பொதுக் கூட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் கூட்டம் நடத்தியதாகவும், அதனை கேட்க வந்த காவல்துறையினரை மிரட்டியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிபதி கேட்டபோது இல்லை என்ற பதிலை கூறியுள்ளேன். பல்லாயிரக்கணக்கான கூட்டங்களில் காவல்துறை விதித்த விதியை மீறி ஒரு கூட்டத்தில் கூட நான் பேசியது இல்லை.
சீமான், பிரபாகரன் புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஏற்கெனவே இது குறித்து நிறைய பேசியுள்ளேன். நெருக்கடியான காலகட்டம் இது ஜனநாயகம் நீடிக்குமா? அல்லது நரேந்திர மோடி சர்வாதிகாரியாக மாறி ஒரே நாடு, ஒரே கொடி, ஒரே தேர்தல் என்று எல்லாவற்றையும் புல்டோசர் வைத்து நசுக்குவதைப் போல செய்து வருகிறார். அம்பேத்கர் வழங்கிய அரசியல் அமைப்புக்கு விரோதமாக நரேந்திர மோடி அரசு செயல்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு வாஜ்பாய் காலத்தில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்திருந்த போது காஷ்மீர் பிரச்சினையை கொள்கை அட்டவணையில் சேர்க்கவில்லை. அதேபோல் புதிய சிவில் சட்டத்தை சேர்க்கவில்லை. அப்போது நானும் முரசொலி மாறனும் பிரகடனத்தில் கையெழுத்திட்டு உள்ளோம். தற்போது, காஷ்மீரை துண்டு, துண்டாக மாற்றி விட்டார்கள். புதிது புதிதாக ஒரே நாடு, ஒரே கொடி, ஒரே தேர்தல், ஒரே மொழி இந்தியும் சமஸ்கிருதம் மட்டும்தான் என அவர் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் சர்வாதிகாரத்தை நோக்கி தான் கொண்டு செல்ல முயற்சிக்கிறார். இதில் நரேந்திர மோடி படுதோல்வி அடைவார். அவர் ஹிட்லர் ஆகவோ, முசோலினி ஆகவோ, இடிஅமின் ஆகவோ முடியாது. அப்படிப்பட்ட நோக்கத்தோடு தான் மோடியின் செயல்பாடுகள் உள்ளன. அது நிச்சயமாக தோற்றுப் போகும். மக்களிடம் விழிப்புணர்ச்சி உண்டாகும். அரசியல் சட்டம் தான் நம்மளை பாதுகாக்கிறது. அதை தந்தவர் டாக்டர் அம்பேத்கர் அதனை அடியோடு மாற்றுகின்ற உள்நோக்கத்தோடு நரேந்திர மோடி செயல்படுகிறார்.அவருக்குப் பின்னால் இருக்கக்கூடிய கூட்டத்தை செயல்படுத்த வைக்கிறார்.
இந்துத்துவா, ஆர்எஸ்எஸ் சேர்ந்து அலகாபாத்தில் ஒரு மாநாடு நடத்தியுள்ளனர். அதில், ஒரே நாடு, ஒரே கொடி, ஒரே தேர்தல் என்றும், இந்தியா என்று சொல்லக்கூடாது பாரத் என சொல்ல வேண்டும் தலைநகர் டெல்லியில் இருந்து மாற்றப்பட்டு வாரணாசியில் கொண்டு செல்லப்படும். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது, உள்ளிட்ட 32 பக்க பிரகடனத்தை வெளியிட்டுள்ளார்கள். அதுதான் அவரது உள்நோக்கம். ஜனநாயகத்தை அளிக்கின்ற முயற்சியில் ஈடுபடுகின்றனர். இந்த நாட்டின் கோடான கோடி மக்கள் ஜனநாயகத்தை 1976 நெருக்கடி காலத்தில் எப்படி பாதுகாத்தார்களோ அதுபோல் பாதுகாப்பார்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்த கேள்விக்கு இதைவிட அதிகமான படுகொலைகளும் கொள்ளைகளும் இதற்கு முந்தைய அரசு இருக்கும்போது நடந்துள்ளது. காவல்துறையினர் கண் விழிப்போடு இருந்து ஒவ்வொரு சம்பவத்திலும் 6 மணி நேரம் 7 மணி நேரத்துக்கு உள்ளாக குற்றவாளிகளை கண்டுபிடிக்கின்றனர். மேலும், காவல்துறையினர் வேகமாகவும் விவேகமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை சந்திப்பது விஜய்யின் விருப்பம். அவர் அனுமதி கேட்டுள்ளார் அனுமதி அளித்துள்ளனர். மத்திய அரசு, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நமக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல் திட்டமிட்டு காலதாமதம் செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.