பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்ட நடிகை ஜாக்குலின் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று முன்தினம் (ஜன. 19) நிறைவு பெற்றது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அக்டோபர் 6 முதல் நடைபெற்றுவந்த இந்த நிகழ்ச்சி, 100 நாள்களைக் கடந்து 106 நாள்களுக்கு ஒளிபரப்பானது. மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் பிக் பாஸ் சீசன் 8 வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வானார். அவருக்கு அடுத்தபடியாக நடிகை செளந்தர்யா தேர்வு செய்யப்பட்டார். இறுதி நிகழ்ச்சியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டவர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் விஜய் சேதுபதி உரையாடினார். இறுதியாக நடிகை ஜாக்குலினும் அவர்களுடன் கலந்துகொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரின் தற்காலிக கோப்பையையும் உடைத்துவிட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், ஜாக்குலின் தனது கோப்பையை உடைக்காமல் எடுத்துச் செல்லலாம் என பிக் பாஸ் அறிவித்திருந்தார். பிக் பாஸ் வீட்டில் அவரின் போட்டித் திறனுக்குப் பரிசாக இதனை பிக் பாஸ் வழங்கியது.
நிகழ்ச்சியில் பணப்பெட்டியை குறித்த நேரத்திற்குள் எடுத்துக்கொண்டு மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வராததால், விதிகளின்படி போட்டியிலிருந்து ஜாக்குலின் வெளியேற்றப்பட்டார். இதனால் ரசிகர்களுடன் உரையாடும் இறுதி வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல்போனது.
இந்நிலையில், இறுதி நிகழ்ச்சியின் மேடையில் ஜாக்குலினுக்கு பயண விடியோ ஒளிபரப்பப்பட்டு, ரசிகர்கள் முன்பு பேசுவதற்கு நேரம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்த பிறகு, ரசிகர்களுக்காக விடியோ வெளியிட்டுள்ள ஜாக்குலின் ரசிகர்களின் அன்புக்கும் வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள விடியோவில் கூறியுள்ளதாவது:-
மக்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. நான் வெளியே வந்த பிறகு எனக்கு இவ்வளவு ஆதரவு கொடுப்பீர்கள் என நான் எதிர்பார்க்கவே இல்லை. அது என்னை நான் மீட்டெடுப்பதற்கு உதவிகரமாக இருந்தது. உங்கள் அன்புக்கு நான் என்ன செய்தேன் எனத் தெரியவில்லை. உங்கள் அன்பை நான் பத்திரமாக வைத்துக்கொள்வேன். யாரென்றே என்னைத் தெரியாதவர்கள் எல்லாம் எனக்காக அழுதுள்ளீர்கள். அதற்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன். நன்றி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.