ஒரே விதமான நுழைவுத் தேர்வு நடைமுறைக்கு ஒவ்வாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம், பட்டப்படிப்பு கற்றல் முறைகள் தொடர்பாக பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்,

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

யுஜிசியின் வரைவு நெறிமுறைகளில் உள்ள பல விதிகள் மாநிலங்களின் கல்விமுறை மற்றும் கல்விக் கொள்கைகளுக்கு முரணாக உள்ளன. இவை மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் கவலையை ஏற்படுத்துகின்றன. நுழைவுத் தேர்வுகள் சமூக – பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நுழைவுத் தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டால், பள்ளிகள் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியில் கவனம் செலுத்தக்கூடும், இது பள்ளிக்கல்வியின் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தும். தமிழகத்தின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் (47 சதவீதம்) ஏற்கெனவே நாட்டிலேயே முதன்மையாக உள்ளது.

நாட்டிலுள்ள மாறுபட்ட கல்வி முறைகள் மற்றும் அமைப்புகளைக் கருத்தில்கொண்டு நாடு முழுவதும் ஒரே விதமான நுழைவுத் தேர்வு என்பது நடைமுறைக்கு ஒவ்வாது. இது மாநில சுயாட்சியை குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்துள்ளது. மாணவர்கள் தங்கள் மேல்நிலைப்பள்ளி பாடப்பிரிவை பொருட்படுத்தாமல் எந்தவொரு பட்டப்படிப்பையும் தொடர அனுமதிக்கும் முறை என்பது போதுமான அடிப்படை பாட அறிவு இல்லாமல் உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்குத் தேவையற்ற கல்வி அழுத்தத்தை உருவாக்கும். எனவே, இளங்கலை, முதுகலை சேர்க்கைகள் பள்ளி இறுதித் தேர்ச்சி மற்றும் இளங்கலை மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

அடுத்ததாக, 4 ஆண்டு கலை அல்லது அறிவியல் பட்டம் பெற்றவர்கள், எம்.டெக் அல்லது எம்.இ. படிப்புகளை தொடர அனுமதிப்பது கவலையளிக்கிறது. அடிப்படை பொறியியல் குறித்த அடித்தளம் இல்லாமல், மாணவர்கள் முதுகலை பொறியியல் படிப்புகளில் சிரமப்படலாம். எனவே இதற்கான தேவை குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும். இதுதவிர, பல நுழைவு மற்றும் பல வெளியேறும் அமைப்பு என்பதும் பல சிக்கல்களை எழுப்புகிறது.

குறிப்பாக, கற்றலின் ஓட்டத்தை சீர்குலைப்பதுடன், பாடத்திட்டத்தில் அவ்வப்போது புதுப்பிப்புகள் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நுழையும் மாணவர்களுக்கு கடினமானதாகும். இம்முறை இடைநிற்றலை சட்டப்பூர்வமாக்குவதுடன், உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சிகளை குறைக்கும். மேலும், பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்காக தற்போது முன்மொழியப்பட்டுள்ள அளவுகோல்கள் பல்கலைக்கழகங்களை திறம்பட வழிநடத்த தேவையான கல்வி மற்றும் நிர்வாக அனுபவம் இல்லாத நபர்களை நியமிக்க வழிவகுக்கும் என்று அஞ்சுகிறோம்.

மாநில பல்கலைக்கழகங்களின் உள்கட்டமைபை மாநில அரசுகள் முழுமையாக ஏற்படுத்தியுள்ளன. இப்பல்கலைக்கழகங்கள் மாநில அரசுகளால் முழுமையாக நிதியுதவி அளிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. மாநிலத்தின் உண்மையான விருப்பங்கள், உள்ளூர் மாணவர்களின் கல்வித் தேவைகள், மாநில கொள்கைகள் ஆகியவை உரிய முறையில் பின்பற்றி உறுதி செய்வதற்கு, துணைவேந்தர்களை தேர்வு செய்யும் நடைமுறையில் மாநில அரசின் பங்கேற்பு மிகவும் முக்கியமானது.

இளங்கலை அல்லது முதுகலை தகுதியிலிருந்து வேறுபட்ட ஒரு துறையில் பி.எச்டி பெற்ற ஒரு விண்ணப்பதாரர் அல்லது அவர்களின் கல்வி பின்னணியிலிருந்து வேறுபட்ட பாடத்தில் நெட் அல்லது செட் தேர்ச்சி பெற்ற ஒருவர், அந்தத் துறையில் கற்பிக்கத் தகுதியுடையவர் என்று வரைவு விதிமுறைகள் முன்மொழிகின்றன. சரியான அடிப்படை பாடப்பிரிவு அறிவு இல்லாமல் பாடங்களை கற்பிக்க தனி நபர்களை அனுமதிப்பது மாணவர்களின் கற்றல் விளைவுகளுக்கு எதிர்மறையாக அமைந்துவிடும்.

இதுபோன்ற பல விதிகள் மாநில பல்கலைக்கழகங்களின் கல்வி ஒருமைப்பாடு, தன்னாட்சி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு கடுமையான சவால்களை ஏற்படுத்தக் கூடும். எனவே, கல்வி அமைச்சகம், வரைவு மசோதாக்களை திரும்பப் பெறவும், இந்தியாவில் உள்ள மாறுபட்ட உயர்கல்வி தேவைகளுடன் சிறப்பாக ஒத்துப்போகும் வகையில் வரைவு விதிகளை மறுபரிசீலனை செய்யவும் வேண்டும். வரைவு விதிமுறைகளை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த ஜன.9-ம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகல் ஒன்றையும் தங்களின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளேன். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.