மாட்டின் மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதா?: செல்வப்பெருந்தகை!

மாட்டின் கோமியத்தை அமிர்த நீர் என்று பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் கூறிய நிலையில், அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

மாட்டுப் பொங்கலன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, கோமியத்தில் கிருமி நாசினிகள், ஜீரண மண்டலத்துக்கு தேவையான பல நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட மருத்துவ குணம் நிறைந்துள்ளது என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஐஐடியின் இயக்குனரிடம் இருந்து வந்துள்ள இந்த அறிவியல் தன்மையற்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல என்றும், ஐஐடி இயக்குனர் பொறுப்பில் இருந்து அவரை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் முளைத்தன. எனினும், பாஜகவினர் காமகோடிக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், மருத்துவருமான தமிழிசை சவுந்தரராஜன், மாட்டின் கோமியத்தை அமிர்த நீர் என்று கூறியுள்ளனர் என்றும், மாட்டின் சாணத்தில் கிருமி நாசினி இருக்கிறது என்றால் கோமியத்திலும் கிருமி நாசினி இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும், மாட்டுக்கறி சாப்பிடுவார்களாம். மாட்டின் சிறுநீரான கோமியத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம் என்றும் விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில், “ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சௌந்தரராஜனுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை. ஆயுர்வேதத்தில் இருக்கிறது என்பதால், கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் நம்ப வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

மாட்டின் கழிவு நீரான சிறுநீரை அமிர்தநீர் என்று பாஜகவில் உள்ளவர்களால்தான் சொல்லமுடியும் என்ற அவர், “இவர்கள் இவ்வாறு சொல்லாவிட்டால்தான் அதிசயம். இதுபோன்ற அமிர்தநீர் ஆராய்ச்சி கொண்ட கருத்துகளை இவர்கள் வெளிநாடுகள் செல்லும் போது சொல்லமுடியுமா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

வடநாடுகளில், மாட்டை வைத்து, கலவரம் செய்து அரசியல் ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.