பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் சீமானின் கருத்தை பிரதிபலிப்பது போல் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரான ஜான்பாண்டியன் பேசியுள்ள நிலையில், அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் சீமான்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து பேசியது தமிழகத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெரியாருக்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் என்ன சம்பந்தம் என பேசி, அவர் சில கருத்துக்களை கூறியிருந்த நிலையில் பெரியார் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,” அம்பேத்கரையும், பெரியாரையும் ஒப்பிடுவது ஓர் முரண். இருவரின் சிந்தனையும் ஒன்றா? இருவருக்கும் சிலை வைத்தால் ஒன்றாகி விடுமா? அம்பேத்கர் உலகின் தலைசிறந்த கல்வியாளர். நமக்கு என்று யாரைக் குறிக்கிறீர்கள்? சமதர்மம், சமத்துவம்தானே உங்கள் கோட்பாடு? நமக்குக் கீழானவர்கள் எதிரி என்றால் அவர்கள் எந்த இனம்? இதைவிடக் கொடிய தீண்டாமை சிந்தனை உண்டா? திமுகதான் பாதுகாப்பு எனக் கூறும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை எதிரிகள் எனக் கூறுவதை எப்படி ஏற்கிறீர்கள்? துளுக்கர்களுக்குக் கொடுக்கும் இடஒதுக்கீடு சாணியில் கால் வைப்பதற்குப் பதிலாக மலத்தில் கால் வைப்பதற்குச் சமம் எனக் கூறியதற்குச் சான்று கேட்கவில்லையே?” என பேசியிருந்தார்.
சீமான் மேலும் சில கருத்துக்களை கூறியிருந்த நிலையில் பெரியார் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தொடர்ந்து சீமான் வீட்டை முற்றுகையிடச் சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சீமானுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. சீமானுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம், திமுக எம்பி கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழக தலைவர் கி வீரமணி உள்ளிட்ட பலரும் சீமானுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சீமானுக்கு ஆதரவாக முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் ஆதரவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவரான ஜான்பாண்டியன் கூறியதாவது:-
பெரியார் ஒழுக்கமான மனிதர் கிடையாது. அவரது பெயரை பயன்படுத்தி பெரிய ஆள் போல காட்டுகிறார்கள். எந்த சாதனையும் அவர் செய்ததில்லை. தீண்டாமையை ஒழித்ததாக சொல்வார்கள். ஆனால் தற்போதும் தீண்டாமை தலை தூக்கி உள்ளது. பெரியார் ஒன்றும் தமிழகத்தில் சீர்திருத்தவாதி கிடையாது. சீமான் பேசியதில் எந்த தவறும் கிடையாது. அவர் பேசியது சரிதான்.
தமிழகத்தில் ஜாதி பார்த்து தான் தண்டனை கூட கொடுக்கப்படுகிறது. எனக்கும் ஜாதி பார்த்து தான் தண்டனை வழங்கப்பட்டது. கடுமையாக போராடி தான் நான் விடுதலை பெற்றேன். காலம் மாறியதற்கும் எழுச்சி உருவாகும். தானாக வந்தது .பெரியாரால் வந்தது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் முதன்முறையாக அரசியல்வாதி ஒருவர் சீமானுக்காக பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜான்பாண்டியனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர். “போற்றுதற்கும், வணக்கத்திற்குரிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் அண்ணன் ஜான்பாண்டியன் அவர்கள் பெரியார் குறித்து இன்று கூறிய கருத்துக்களை வரவேற்கிறேன். சரியான நேரத்தில் சரியான கருத்துகளைப் பதிவுசெய்த அன்பிற்கினிய அண்ணன் அவர்களுக்கு என்னுடைய அன்பும், நன்றியும்!” என பதிவிட்டுள்ளார்.