செந்தில் பாலாஜி, சேகர் பாபு இருவரும் அரசியல் வியாபாரிகள்: எடப்பாடி பழனிசாமி!

ஒரு ஐந்தாண்டு காலத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சி சின்னத்திலும் தேர்தலில் நின்ற நபர் செந்தில் பாலாஜி, அவரைப் போன்று தான் அமைச்சர் சேகர் பாபு பேசி வருகிறார் எனவும், இருவரும் அரசியல் வியாபாரிகள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

திமுக ஆட்சியில், எந்த சாதனையும் இல்லை கடன் வாங்குவதில் திமுக அரசு சாதனை அமைந்துள்ளது. அதிமுக ஆட்சியில் பெட்ரோல் மதுபான விற்பனை மூலமாக லாபத்தை விட திமுக பொறுப்பேற்ற பிறகு 23 லிருந்து 25 ஆம் ஆண்டு வரை பெட்ரோல் மதுபானம் 29 ஆயிரம் கோடி கூடுதலாக அதிகரித்து உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டு காலத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கு மேலாக வருமானம் வந்துள்ளது.

செந்தில் பாலாஜிக்கு அமைதிப்படை அமாவாசை என்ற பெயர் பொருத்தமானது. ஐந்து கட்சிக்கு சென்று திமுகவிற்கு வந்துள்ளார். இனிமேல் எந்த கட்சிக்கு செல்வார் என்று தெரியாது. ஒரு ஐந்தாண்டு காலத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சி சின்னத்திலும் தேர்தலில் நின்ற நபர் செந்தில் பாலாஜி. இவரைப் போன்று தான் அமைச்சர் சேகர் பாபு பேசி வருகிறார். ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும்போது திமுக ஆட்சி காலத்தில் ஆட்சி காலம் கலைந்து கொண்டே இருக்கிறது. இவர்கள் எல்லாம் அரசியல் வியாபாரிகள். உண்மையான விசுவாசி என்றால் ஒரே கட்சியில் இருக்க வேண்டும். கட்சி ஆரம்பித்த போது அதிமுகவில் சேர்ந்தேன். அந்த கட்சியை நேசித்தேன். அதனால் எனக்கு பொதுச் செயலாளர் என்று அங்கீகாரம் கிடைத்துள்ளது. சந்தர்ப்ப சூழ்நிலையை கருதி வேடந்தாங்கல் பறவைகள் போன்று அவ்வப்போது வந்து செல்பவர்கள். இவர்கள் எல்லாம் எங்களைப் பற்றி பேசுவதற்கு அருகதை கிடையாது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். அவர்களுக்கு குடிநீர் உள்ளிட்டவைகள் கிடைக்கவில்லை என்று மக்கள் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதற்கு முறையாக அமைச்சர் சேகர்பாபு பதில் அளிக்கவில்லை. பக்தர்களுக்கு கூறும் கருத்துக்களை உள்வாங்கி அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்; பக்தர்கள் மனம் புண்படும்படி கருத்து கூறியது கண்டிக்கத்தக்கது.

கூட்டணியை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் மட்டுமே முடிவு செய்யப்படும். தேர்தல் முடிந்தவுடன் கொள்கைகள் படி வெளியே சென்று விடுவார்கள். எதிர்க்கட்சி என்று வரும் போது ஆளும் கட்சியின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டும் ஆளும் கட்சி தவிர்த்து மற்ற கட்சிகள் அனைத்தும் எதிர்க்கட்சிகள் தான். மக்களுடைய பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தான் அரசின் கடமை. ஒவ்வொரு ஆட்சியில் நடைபெறும் குற்றங்களை எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டும் போது அதை ஆளும் கட்சி ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும்; ஆனால் குற்றச்சாட்டுகளை கூறும் எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்கின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டோம் இதுவரையில் தனியாக தான் இருந்து வருகிறோம். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரதமருக்கு கருப்பு பலூன் காட்டியவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று ஆளுங்கட்சியான உடன் வெள்ளை குடை ஏந்தினார்கள். அதிமுகவை பொருத்தவரைக்கும் வேண்டுமென்றால் வேண்டும் வேண்டாம் என்றால் வேண்டாம். கூட்டணி என்பது வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கூட்டணி அமைக்கப்படுகிறது எதிரிகள் வீழ்த்த வேண்டும் என்பதற்கு தான் கூட்டணி.. கூட்டணிகள் கூறும் அனைத்திற்கும் தலையாட்டுவதற்கு அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.