விஜய்யை கண்டு தமிழக அரசுக்கு எந்த பயமும் இல்லை: அப்பாவு!

தவெக தலைவர் விஜய்யை கண்டு தமிழக அரசுக்கு எந்த பயமும் இல்லை என தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறியதாவது:-

மாநில சட்டப்பேரவை தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் பிகாரில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று தமிழக ஆளுநர் 3 ஆண்டுகளாக தமிழக சட்டசபையில் நடந்து கொண்டது தொடர்பாகவும், மாநிலங்களில் அவ்வாறு ஆளுநர்கள் செயல்படக்கூடாது எனவும் வலியுறுத்தி பேசினேன்.
தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுப்பது கிடையாது. எந்த முயற்சியும் எடுக்காமல் தீர்மானங்கள் குறித்து யோசிக்காமல் அதனை திருப்பி அனுப்பி விட்டு மீண்டும் அந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தும் நிறைவேற்றாமல் இருந்து வருவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் பேசினேன். தமிழக அரசு கொண்டுவரும் எந்த சட்டத்தையும் நிறைவேற்றாமல் ஆளுநர் கிடப்பில் போட்டிருப்பதையும் தெளிவாக எடுத்துரைத்தேன்.

இது குறித்து பேச அனுமதி மறுத்ததுடன் உங்களது பேச்சு பதிவாகாது என ராஜ்ய சபா துணைத் தலைவர் நாராயணன் தெரிவித்தார். மாநில ஆளுநர்கள் இந்திய அரசியலமைப்புக்கு எதிராக சட்டமன்றத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவதாகவும் என் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் குறித்து தவறாகவும் உண்மைக்கு புறம்பாகவும் எந்த கருத்தும் என்னால் பேசப்படவில்லை. ஆனால் அதனை துணை சபாநாயகர் பதிவு செய்ய மாட்டேன் என சொல்லியிருப்பது ஏற்புடையதல்ல. அவர் என்ன நோக்கத்திற்காக பதிவு செய்ய மாட்டேன் என சொல்லி உள்ளார் என்பதும் தெரியவில்லை. ஆகையால் ஜனநாயக முறைப்படி எனது எதிர்ப்பை காட்டும் வகையில் வெளிநடப்பு செய்திருந்தேன்.

‘தம்பி ஞானசேகரன்’ என ஒரு நிகழ்ச்சியில் சாதாரணமாக பேசியதை பெரிதுபடுத்தி வருகிறார்கள். நான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ஞானசேகரன் என்ற நபர் எனக்கு சால்வை அணிவித்தார். அவரது பெயரை கேட்டு நகைச்சுவையாக அவரை மையப்படுத்தி பேசியதை சர்ச்சையாகி விட்டனர். வெட்டி ஒட்டி அந்த காணொளியை வெளிப்படுத்தி உள்ளனர். முழு காணொளியை பார்த்தால் அந்த விவகாரத்தின் உண்மை நிலை தெரியும்.

யுஜிசி என்பது எந்த ஒரு அதிகாரமும் இல்லாத அமைப்பு. மாநில அரசு தான் அனைவருக்குமான கல்வி சாலையை உருவாக்குகிறது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் இன்ஸ்டியூட் ஆக மட்டுமே உள்ளன. யுஜிசி ஆய்வுகளுக்கு மட்டுமே பணம் கொடுப்பார்கள்.

பரந்தூர் விமான நிலையம் அந்த பகுதியை விட்டு வேறு எங்கும் செல்லாது. பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். விஜய்யை கண்டு தமிழக அரசுக்கு எந்த பயமும் இல்லை. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்தோடு சிலர் செயல்பட நினைக்கிறார்கள். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்கள் நடத்த வேண்டும் என அரசு தெளிவாக தெரிவித்துள்ளது. நீங்கள் சொல்லும் நபர் (விஜய்) திருமண மண்டபத்தில் நிகழ்ச்சியை நடத்தவே அனுமதிக்கப்பட்டது. ஆனால் அவர் சட்டம் – ஒழுங்கு பாதிப்பு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார். இவ்வாறு அப்பாவு கூறினார்.