கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பேருந்துக்காக காத்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரது நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்திருக்கும் நிலையில், கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது பாஜக.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படுகிறது. இங்கு அதிக அளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் இங்கு வேலை பார்த்து வருகின்றனர். அவ்வாறு தங்கி இருக்கும் இளைஞர்கள் வார இறுதி நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அப்படி தனது ஊருக்கு சென்று விட்டு வந்து பேருந்துக்காக காத்திருந்த இளம் பெண் தான் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்.
கிருஷ்ணகிரி பேரிகையை அருகே சத்தியமங்கலத்தைச் சேர்ந்த 37 வயது பெண் தான் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு உள்ளாக்கப்பட்டவர். கடந்த 19ஆம் தேதி தனது சொந்த ஊரான கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்தில் வந்திருக்கிறார். தொடர்ந்து டவுன்ஹால் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய அவர் அங்கிருந்து எலஹங்கா பகுதியில் வசிக்கும் தனது சகோதரி வீட்டுக்கு செல்வதற்காக பிஎம்டிசி பேருந்துக்காக காத்திருந்திருக்கிறார். இரவு 11:30 மணி ஆன நிலையில் அங்கு இரண்டு பேர் வந்திருக்கின்றனர். அவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில் அவர்களிடம் எலஹங்கா செல்லும் பேருந்து எப்போது வரும் என அந்த பெண் கேட்டிருக்கிறார்.
இந்த நிலையில் இங்கு பேருந்து வராது பேருந்து நிற்கும் இடத்திற்கு நாங்கள் அழைத்துச் செல்கிறோம் என கூறி அந்த பெண்ணை இருவரும் அழைத்துச் சென்றனர். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டு பகுதிக்கு சென்றதும் அந்தப் பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். மேலும் அந்தப் பெண் அணிந்திருந்த தங்க சங்கிலி உள்ளிட்ட நகைகளை பறித்துக் கொண்டு தப்பியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் இதுகுறித்து எஸ்.ஜே பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் கேஆர் மார்க்கெட்டில் வேலை செய்யும் கணேஷ், சரவணன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் பெங்களூரில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாக பாஜக குற்றம் சாட்டி உள்ளது. அதே நேரத்தில் இந்த சம்பவத்தை பாஜக அரசியல் ஆக்க விரும்புகிறது பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கவே இல்லையா என கேள்வி எழுப்பி இருக்கிறார் கர்நாடக முதலமைச்சரான சித்ராமையா. அந்த நேரத்தில் அனைத்தையும் அரசியலாக்கி நியாயப்படுத்த நினைக்கும் சித்தரமையா மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக பாஜக கூறியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண் பெங்களூருவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.